இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை கடந்த 7 ஆண்டுகளில் 19 மடங்கு அதிகரித்துள்ளது என் பிரதமர் மோடி பேச்சு.
டெல்லி, ரிசர்வ் வங்கியின் 2 புதுமையான வாடிக்கையாளர் சேவை திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் ஆகியோர் பங்கேற்றனர். ஆர்.பி.ஐ. சில்லறை நேரடி திட்டம் மற்றும் ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த குறைதீர்ப்பு திட்டம் என்ற இரண்டு திட்டங்களை தொடங்கி வைத்த பின்னர் பேசிய பிரதமர் மோடி,
21ம் நூற்றாண்டின் இந்த தசாப்தம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது எனவும் இதில் ரிசர்வ் வங்கியின் பங்கு மிகப் பெரியது மற்றும் தேசத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்படும் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார். “சில்லறை நேரடித் திட்டம்” நாட்டில் உள்ள சிறு முதலீட்டாளர்களுக்கு அரசுப் பத்திரங்களில் எளிய மற்றும் பாதுகாப்பான முதலீட்டுக்கான ஊக்கத்தை வழங்கியுள்ளது என குறிப்பிட்ட பிரதமர் இன்று ஒருங்கிணைந்த குறைதீர்ப்பாளர் திட்டத்துடன் வங்கித் துறையில் ஒரே நாடு, ஒரே குறைதீர்ப்பாளர் என புதியதோர் வடிவம் பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், இன்று தொடங்கப்பட்ட இரண்டு திட்டங்களும் நாட்டில் முதலீட்டின் நோக்கத்தை விரிவுபடுத்துவதோடு முதலீட்டாளர்கள் மூலதனச் சந்தைகளை அணுகுவதை எளிதாகவும் பாதுகாப்பாகவும் மாற்றும் என்றார்.
வங்கித் துறையை வலுப்படுத்தும் நோக்கிலே கூட்டுறவு வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வரப்பட்டது எனவும் இதனால் வங்கிகளின் நிர்வாகமும் மேம்பட்டு வருவதாக தெரிவித்தார்.மேலும், லட்சக்கணக்கான பணம் வரவு வைத்துள்ளவர்களுக்கு இந்த அமைப்பின் மீதான நம்பிக்கை வலுப்பெற்று வருகிறது. கடந்த ஆண்டுகளில் நாட்டின் வங்கித் துறையில் நிதித் துறை சேர்ப்பது முதல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு மற்றும் பிற சீர்திருத்தங்கள் வரை
வங்கிகளின் வலிமையை நாம் அனைவரும் பார்த்தோம் என தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கியின் முடிவுகள் அரசு எடுத்து வரும் பெரிய முடிவுகளின் தாக்கத்தை அதிகரிக்க உதவியுள்ளது என பேசிய பிரதமர் கடந்த 7 ஆண்டுகளில் இந்தியா டிஜிட்டல் பரிவர்த்தனையில் 19 மடங்கு வளர்ந்துள்ளது. இன்று நமது வங்கி அமைப்பு 24 மணி நேரம், 7 நாட்கள், 12 மாதங்கள் என எந்நேரத்திலும் நாட்டில் எங்கும் செயல்படும் நிலை உள்ளது என பெருமிதம் தெரிவித்தார்.
இந்தியாவின் புதிய அடையாளத்தின் உணர்திறன் மற்றும் முதலீட்டாளர்களுக்கு ஏற்ற இடமாக ரிசர்வ் வங்கி தொடர்ந்து வலுப்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளதாக பேசிய பிரதமர்; நாட்டின் மக்களின் தேவைகளை நாம் முதன்மையாக வைத்திருக்க வேண்டும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை தொடர்ந்து பலப்படுத்த வேண்டும் என்றார்.
கடந்த 6-7 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டின் சாமானியமக்கள், ஏழைக் குடும்பங்கள், விவசாயிகள், சிறு வியாபாரிகள்,தொழிலதிபர்கள், பெண்கள், தலித்கள்- தாழ்த்தப்பட்டோர்- பிற்படுத்தப்பட்டோர் என அனைவருக்கும் வங்கி, பென்ஷன், இன்சூரன்ஸ் என அனைத்தும் வெகு தொலைவில் இருந்தது. ஆனால் கடந்த 7 ஆண்டுகளில் வங்கிகள் மற்றும் மக்கள் முன்னேற்றம் தொடர்பாக இன்று பல்வேறு சீர்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டு உள்ளது என்றார்.