சேலம் மண்டல பத்திர பதிவுத்துறை டிஐஜி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி விசாரித்ததில், அவர் பல கோடிக்கு சொத்துகளை வாங்கி குவித்திருக்கும் பரபரப்பு தகவல் தெரியவந்துள்ளது.
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கான பத்திர பதிவுத்துறை டிஐஜி அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு ஆனந்த் என்பவர் டிஐஜி யாக பணியாற்றினார். அவர் ஐந்து நாட்களுக்கு முன்பு கடலூருக்கு மாறப்பற்றார். இதனால், 30ம் தேதி அவர் பணியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார். தொடர்ந்து 2 நாட்களாக சேலம் அழகாபுரம் கைலாசாநகரில் உள்ள தனது வீட்டில் இருந்து கொண்டு, மண்டலத்தில் உள்ள சார்பதிவாளர்களை வீட்டுக்கு வரவழைத்து வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இந்த செய்தியால் ஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் எஸ்பி சந்திரமவுலி தலைமையிலான போலீசார் அதிரடியாக பதிவுத்துறை டிஐஜி வீட்டுக்கு சோதனை செய்ய சென்றனர். அதில், 3.20 லட்சம் பணம், 11.75 லட்சம் மதிப்புள்ள 34 தங்க காசுகள், 7 வங்கிகளில் உள்ள கணக்கு விவர ஆவணங்கள், பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதனை தொடர்ந்து நடந்த விசாரணையில் பல பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சென்னை அண்ணாநகர் மேற்கில் 63.70 லட்சத்திற்கு பிளாட் வாங்கியுள்ளார். அதன் மதிப்பு தற்போது பல கோடியாகும். மேலும், சென்னை திருமங்கலத்தில் பல கோடி மதிப்புள்ள பெரிய வீடும், திருவள்ளூரில் பல கோடி மதிப்பில் மற்றொரு பெரிய வீடும் உள்ளது. மேலும், பல இடங்களில் கோடிக் கணக்கில் சொத்துகளை வாங்கி குவித்துள்ளார்.
லஞ்ச ஒழிப்புத்துறையினரின் இச்சோதனை, சேலம் பத்திர பதிவுத்துறை அதிகாரிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.