மிகப்பெரிய நெருக்கடியும், அவசர அவசியமும் திமுகவுக்கு எழுந்துள்ளது.. இந்த முறையாவது கொங்கு மண்டலத்தை தன் வசப்படுத்துமா என்பதுதான் அது!
கொங்கு மண்டலம் என்பது கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது. மொத்தம் 61 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது. பொதுவாக கொங்கு மண்டலத்தில், வெள்ளாள கவுண்டர் சமுதாயத்தினர் அதிகமாக வாழும் பகுதி ஆகும்.. அடுத்து முதலியார்கள்… அருந்ததியினர்.. என்று பெரும்பாலானோர் இருக்கிறார்கள்.. வழக்கமாக இதை அதிமுகவின் கோட்டை என்பார்கள். அங்கிருப்பவர்கள் பெரும்பாலும் எம்ஜிஆர் ரசிகர்களும்கூட… அதனால்தான் அங்கு அதிமுக வெற்றி என்பது இவ்வளவு காலமாக எளிதாக நடக்க முடியாத விஷயமாக இருந்து வருகிறது.
ஆனால் திமுகவால் ஏன் கொங்கு மண்டலத்தை தன் பிடியில் வைத்திருக்க முடியவில்லை.. இன்னும் சில மாதத்தில் தேர்தல் வர போகிறது? கட்சியை வலுப்படுத்தவும், பலப்படுத்தவும் மூத்த தலைவர் கே.என். நேரு நேரடியாகவே களம் இறங்கி உள்ளார்.. தமிழக மாவட்டங்களில் அதிரடிகளை கையில் எடுத்து, அந்த ரிப்போர்ட்டையும் தலைமைக்கு அனுப்பி, அதன்மூலம் பல மாற்றங்களும் செய்யப்பட்டு வருகின்றன.. இது வரவேற்கப்பட வேண்டியதுதான்.
ஆனால், இந்த நாலரை வருஷமாக கொங்கு மண்டலத்தை எப்படி பலப்படுத்தி உள்ளது திமுக? தேர்தல் வரும் சமயத்தில்தான் இதையெல்லாம் செய்ய வேண்டுமா? ஆட்சியில் 10 வருஷமாக இல்லாததற்கு மிக முக்கிய காரணமே இந்த கொங்கு மண்டலத்தை திமுக சரிக்கட்டாததுதான்.. அப்படி இருந்தும் ஏன் இதில் சரியான கவனத்தையும், களப்பணியையும் மேற்கொள்ளவில்லை என கேட்கிறார்கள் பொதுமக்கள்!
இதை பற்றி கொங்கு மண்டலத்தை சேர்ந்த திமுக பிரமுகர்கள் சிலரிடம் பேசினோம்.. அவர்கள் சொன்னவை இதுதான.. “இங்கே நிறைய கட்டமைப்புகள் செய்திருக்கணும்.. பிரசாந்த கிஷோருக்கு போய் அத்தனை கோடியை கொட்டணுமா? அதை இங்கே எப்போதோ செலவு செய்திருந்தால் திமுக இந்நேரம் ஆட்சியில் இருந்திருக்குமே? இதோ, இப்போ அந்தியூர் செல்வராஜை நியமித்து இருக்காங்க.. அவரை நியமனம் செய்து இத்தனை மாசம் ஆகிறது.. ஆனால், இதுவரை எவ்வளவு அருந்ததியர்களை கட்சியில் இணைத்திருக்கிறார்? என்ன செய்திருக்கிறார்?
கலைஞர் இருந்தபோது, கொங்கு வேளாளருக்கு பிசி சட்டம் கொண்டுவந்தார்… வன்னியர்களுக்கு எம்பிசிக்கு கொண்டு வந்தார்.. அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு செய்தார்… இப்படி 3 சாதிகளுக்கும் கருணாநிதி செய்த நலன்கள் ஏராளமானவை.. ஆனால், அப்படியும் திமுகவை இவர்கள் கைவிட்டுவிடுகிறார்கள்.. செங்குந்தர் முதலியார்களுக்கு எதுவுமே செய்யவில்லை.. ஆனாலும் ஐப்பெருந் தலைவர்கள் ஆரம்ப திமுகவில் இருந்ததால் இப்போதுவரை, அவர்கள்தான் திமுகவுக்கு ஓட்டுபோட்டு வருகிறார்கள்” அரசியல் நோக்கர்கள்.
ஆ.ராசாவை முழுசுமாக நம்பலாம்.. இருந்தாலும் மேல்மட்ட அளவிலேயே அவர் அரசியல் செய்கிறாரே தவிர, சாதீய வாக்குகளை அள்ள மண்டல ரீதியாக அவர் இன்னும் செயல்பட வேண்டும் என்கிறார்கள்.. இது எல்லாவற்றிற்கும் மேலாக கூட்டணி கட்சியான விசிக மீது அதிருப்தி உள்ளது.. 15 வருஷத்துக்கு முன்பு திருமாவளவன் பேசிய பேச்சை இன்னும் கொங்கு மண்டலம் மறக்கவில்லை என்கிறார்கள்… விசிக கூட்டணியில் இல்லை என்றாலே பாதி ஓட்டு அசால்ட்டாக விழுந்துவிடும் என்றும் சொல்கிறார்கள்.
அதனால் திமுக இப்போது தீவிரமாக களமிறங்க வேண்டிய நேரம்.. கருணாநிதி இருந்திருந்தால், இப்படி ஒரு இடைவெளியையே விட்டிருக்க மாட்டார்.. கொங்கு மண்டலத்தில் எங்கு வீக், எங்கு ஸ்ட்டிராங் என்பதில் ஆரம்பித்து, நிர்வாகிகளை தயார் செய்து இந்நேரம் தேர்தலுக்கு ரெடியாக வைத்திருப்பார்.. இனி வரும் நாட்களிலாவது இதை திமுக கையில் எடுக்க வேண்டும்.. காழ்ப்புணர்ச்சிகள், சர்ச்சைகள், அதிருப்திகள் மூத்த தலைவர்கள் யார் மீது இருந்தாலும், அதை தூக்கி தூரமாக போட்டு விட்டு, கொங்குவை கொக்கு போட்டு இழுக்கும் முயற்சியில் முழுசாக இறங்க வேண்டும்.