முந்திரி தொழிற்சாலை ஊழியர் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த திமுக எம்.பி ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணமடைந்துள்ளார். ஊழியர் கொலை தொடர்பாக கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ். மற்றும் அவரது தொழிற்சாலையில் உள்ள நடராஜ், அல்லா பிச்சை, சுந்தர், வினோத், கந்தவேல் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.

சந்தேகமடைந்த அவரது மகன் மற்றும் உறவினர்கள் கோவிந்ததாஜின் உடலை பார்த்துள்ளனர். அப்போது அவர் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததால் காடாம்புலியூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தனது தந்தை கொலை செய்யப்பட்டதாகவும், இது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேல் கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன. கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய மனு அளித்ததோடு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதில், கடந்த 19ஆம் தேதி வேலைக்குச் சென்ற எனது தந்தை வீடு திரும்பவில்லை. அவர் விஷம் குடித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது, அவரது உடலில் ரத்தக் காயங்கள் மற்றும் அடித்துதுன்புறுத்தியதற்கான அடையாளங்கள் இருந்தது. எனவே, எனது தந்தை அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.
அவரது மரணம் குறித்து காடாம்புலியூர் போலீசார் உரிய முறையில் விசாரிக்கவில்லை. எனவே, எனது தந்தையின் உடலை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்களைக் கொண்டு பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும். அத்துடன் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். சென்னை நீதிமன்ற உத்தரவின்படி விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைத்திருந்த கோவிந்தராஜூவின் உடலை ஜிப்மர் மருத்துவர்களைக் கொண்டு பிரேத பரிசோதனை செய்தனர்.கோவிந்தராசு மர்ம மரண வழக்கு விசாரணையை சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.
விழுப்புரம் சிபிசிஐடி கூடுதல் எஸ்.பி கோமதி, இன்ஸ்பெக்டர் சுந்தரராஜ் ஆகியோர் பண்ருட்டி மற்றும் பணிக்கன்குப்பத்தில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கோவிந்தராஜ் அடித்து துன்புறத்தப்பட்டதாக அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் வாக்குமூலம் அளித்தனர். இதனையடுத்து, கோவிந்தராஜை அடித்து, விஷம் கொடுத்து கொலை செய்தது அம்பலமானது.
கோவிந்தராசு அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கோவிந்தராசுவின் மர்ம மரண வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் கொலை வழக்காக மாற்றி உள்ளனர். கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ். மற்றும் அவரது தொழிற்சாலையில் உள்ள நடராஜ், அல்லா பிச்சை, சுந்தர், வினோத், கந்தவேல் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில், நாடாளுமன்ற உறுப்பினரைத் தவிர மற்ற 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த கடலூர் திமுக எம்பி ரமேஷ் விரைவில் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். வழக்கை விசாரித்த பண்ருட்டி நீதிமன்றம் கடலூர் திமுக எம்.பி. ரமேஷை அக்டோபர் 13ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.




