சேலத்தில் இரு சிறுநீரகங்களும் செயலிழந்து துன்புற்று வரும் ஜனனி என்ற சிறுமிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அலைபேசியில் அழைத்து ஆறுதல் கூறியுள்ளார்.

சேலம், அரிசிப்பாளையம் பகுதியை சேர்ந்த விஜயக்குமார்-ராஜலட்சுமி தம்பதியின் மகளான ஜனனி என்ற 14 வயது சிறுமி, சிலம்பம்,வில்வித்தை, ஸ்கேட்டிங் போன்ற போட்டிகளில் மாநில அளவில் பரிசுகளை வென்று அசத்தியவர்.
இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இச்சிறுமிக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துள்ளன. தந்தை குடும்பத்தை கைவிட்ட நிலையில்,தாயின் உதவியுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக டயாலிசிஸ் சிகிச்சை செய்துகொண்டு வருகிறார். டயாலிசிஸ் செய்யவும் போதிய வருமானம் இல்லாததால்,முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உதவிடுமாறு பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தாயார் கோரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்டனர்.
இதனைத் தொடர்ந்து, சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அலைபேசியில் அழைத்து ஆறுதல் கூறினார். மேலும்,தைரியமாக இருக்குமாறும்,சிகிச்சை குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களிடம் பேசியிருப்பதாகவும் அச்சிறுமியிடம் முதலமைச்சர் நம்பிக்கை அளித்தார்.




