ஜெய்பீம் பட விவகாரம் தொடர்பாக வெளியாகும் எவ்வித கருத்துகளுக்கும் எதிர்வினை ஆற்ற வேண்டாம் என்று ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா நற்பணி மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
நடிகர் சூர்யா தனது 2 டி என்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரித்து, நடித்துள்ள படம், ’ஜெய்பீம்’. த.செ.ஞானவேல் இயக்கியுள்ள இந்தப் படம் ப்ரைம் வீடியோஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்தப் படத்தில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. அந்த போலீஸ் கேரக்டரின் பின்பக்கம் வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டத்தை காட்டியதாகவும் விமர்சனம் எழுந்ததை அடுத்து இந்தக் காட்சி மாற்றி அமைக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யாவுக்கு பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ’ஜெய்பீம்’ படத்தில் வன்னியர்கள் குறித்து தவறாக சித்தரித்தற்காக ரூ.5 கோடி நஷ்ட ஈடு கோரி, நடிகர் சூர்யா, ஜோதிகா, அமேசான் நிறுவனத்திற்கு வன்னியர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வன்னியர்களின் மாண்புக்கு இழுக்கு ஏற்படுத்தியதற்காக 24 மணி நேரத்திற்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சியை நீக்க வேண்டும் என்றும், 7 நாட்களுக்குள் ரூ.5 கோடி அபராதம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அகில இந்திய நடிகர் சூர்யா தலைமை நர்பணி மன்றம் சார்பில், அதன் தலைவர் பரமு, செயலாளர் வீரமணி ஆகியோர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் கூறப்பட்டிருப்பதாவது:
சூர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஜெய்பீம்’ திரைப்படம் அதிகாரத்துக்கு எதிரான மக்களின் போர்க்குரலாக உலகமெங்கும் ஒலிக்கிறது. படத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பும் அங்கீகாரமும்தான் இந்த மண்ணில் மாற்றம் நிகழும் என்பதற்கான நம்பிக்கை. அதே நேரம் படத்துக்கு எதிரான கருத்துகளை ஒரு சிலர் திட்டமிட்டுப் பரப்பி வருவதையும் கவனிக்கிறோம். சூர்யாவுக்கு எதிராகப் பேசப்படும் நியாயமற்ற விஷயங்களை அறம் சார்ந்த இந்த சமூகம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. அதனால் எப்போதும் போல் நாம் பொறுமையாக இருப்பதுதான் சிறப்பு.
சூர்யா, எந்த சாதி மத வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டவர் என்பதை இந்த நாடு நன்கறியும். அதனால் எவருக்கும் விளக்கமோ பதிலடியோ கொடுக்க வேண்டிய அவசியம் நமக்கு இல்லை. கட்டுப்பாடும் பொறுமையும் கொண்ட நம் மன்றத்தினர் பேச்சாகவோ சமூக வலைத்தளப் பதிவுகளாகவோ எவ்வித எதிர்வினையும் ஆற்ற வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
“தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற” என்று சூர்யா அண்ணன் நமக்கு கற்பித்த பாதையில் பயணிப்போம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.