
உத்தரபிரதேசத்தில் ஒரு மருத்துவர் தனது கிளினிக்கில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் போது முககவசம் அணியாததற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முககவசம் அணியாமல் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த ஜான்சி நகரத்தில் ஒரு மருத்துவர் மீது கோட்வாலி காவல்துறை ரூ 10,000 அபராதம் விதித்துள்ளது.
ஜான்சி நகரப் பகுதியில் உள்ள நரியா பஜாரில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை ஒரு போலீஸ் குழு வழக்கமான சோதனையில் ஈடுபட்டபோது இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன, அங்கு ஒரு மருத்துவர் ஒரு சிறிய கேபினில் ஏராளமான நோயாளிகளுடன் அமர்ந்திருப்பதை போலீஸ் குழு கண்டுள்ளது.
கிளினிக் சிறியதாக இருந்தது மற்றும் நோயாளிகள் ஒன்றாக அமர்ந்திருந்தனர். அவர்களில் பெரும்பாலோர் முககவசம் அணியாமல் இருந்தனர். இதையடுத்து எஸ்.ஓ. கோட்வாலி தேவேஷ் குமார் சுக்லா தலைமையிலான போலீசார் கிளினிக் உள்ளே சென்று விசாரித்துள்ளனர்.
அப்போது டாக்டரும் முககவசம் அணியாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். இதையடுத்து டாக்டருக்கு அதிகபட்சமாக ரூ 10,000 அபராதம் விதிக்கப்பட்டது.
காவல்துறை அதிகாரி ஒருவர், “முன்னதாக, முககவசம் அணிய வேண்டும் என்று நான் டாக்டரை எச்சரித்தேன். ஆனால் அவர் கேட்கவில்லை. ஒரு டாக்டராக இருப்பதால், அவர் நெறிமுறையைப் பின்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அதைப் புறக்கணித்தார். எனவே அபராதம் விதிக்கப்பட்டது.” எனக் கூறினார்.




