இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரோஹித் சர்மாவுடன் என்னை ஒப்பிடவேண்டாம் என்று பாகிஸ்தான் வீரர் ஹைதர் அலி கேட்டுக்கொண்டார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வயது பேட்ஸ்மேனாக வலம் வருபவர் ஹைதர் அலி. தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலம் பாகிஸ்தான் அணியில் அவருக்கு இடம் கிடைத்தது.
இங்கிலாந்துக்கு எதிராக டி20 போட்டியில் களம் இறங்கிய ஹைதர் அலி முதல் போட்டியிலேயே அரைசதம் விளாசினார். இதனால் பாகிஸ்தான் அணி நட்சத்திர வீரராக உருவாக வருகிறார் ஹைதர் அலி.
இந்நிலையில் ஹைதர் அலியை ஹிட்மேன் என்று அழைக்கப்படும் ரோஹித் சர்மாவுடன் ஒப்பிடுகிறார்கள். இதுகுறித்து ஹைதர் அலி கூறும்போது, “என்னை ரோஹித் சர்மாவுடன் ஒப்பிடுவதை அசவுகரியமாக உணர்கிறேன் ரோஹித் சர்மா டாப் பேட்ஸ்மேனாக உள்ளார்.
என்னை மற்றவர்களுடன் ஒப்பிடும்போது அசவுகரியமாக உணர்கிறேன். ஒப்பீடு வேண்டாம். அவர் ஏற்கனவே அதிக அளவில் சாதித்துள்ளார்.
மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் என்னால் சிறப்பாக ரசித்து விளையாட முடியும் என்று நம்புகிறேன். இதற்கு எனக்கு முதல்தர கிரிக்கெட் சிறப்பாக அமைந்தது. பயிற்சியாளர் முகமது வாசிமின் வழிகாட்டுதலில் மேலும் சிறப்பாக விளையாடுவேன்” என்றார்.




