வாய்த் தகராறு முற்றியதால், கணேசன் தன்னிடம் வைத்திருந்த கத்தியால் மணிகண்டனைக் குத்திக் கொலை செய்திருக்கிறார். பின்னர், நிஷாந்த் உடன் சேர்ந்து ஜேம்ஸ் டவுன் பகுதியிலுள்ள குளத்தில் மணிகண்டன் உடலில் கல்லைக் கட்டி வீசினர்.
கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகேயுள்ள ஜேம்ஸ் காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (32). கூலி வேலை செய்துவரும் இவர், கஞ்சா போதைப் பழக்கம் உடையவர் எனக் கூறப்படுகிறது. மேலும், இவர் நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சாப் பொட்டலங்கள் விற்பனை செய்தும் வந்திருக்கிறார். மணிகண்டனும் அவரின் நண்பர்கள் சிலரும் தினமும் அதே பகுதியிலுள்ள குளத்தின் கரையில் அமர்ந்து கஞ்சா புகைப்பதும், மது அருந்தி போதை மயக்கத்தில் இருப்பதும் தொடர்கதையாக நடந்து வந்திருக்கிறது. இந்நிலையில் கடந்த 31-ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற மணிகண்டன் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அவரின் உறவினர்கள் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில், மணிகண்டனைக் காணவில்லை எனப் புகாரளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீஸார் நடத்திய விசாரணையில், மணிகண்டன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இதைத் தொடர்ந்து தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
மேலும், மணிகண்டனின் உடலில் கல்லைக் கட்டி அந்தப் பகுதியிலுள்ள குளத்தில் வீசியதும் விசாரணையில் வெளியே வந்தது. இதைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் குளத்திலிருந்து கயிறால் கட்டப்பட்ட நிலையில் மணிகண்டனின் உடல் மீட்கப்பட்டது.
இது குறித்து போலீஸார் கூறுகையில், “அஞ்சுகிராமம் பகுதியைச் சேர்ந்த காவல்துறை எஸ்.எஸ்.ஐ ஒருவரின் மகன் நிஷாந்த் மற்றும் கணேசன் ஆகியோர் மணிகண்டனின் நண்பர்கள். மணிகண்டன் கஞ்சாப் பொட்டலங்களை மறைத்துவைத்ததாகக் கூறி நிஷாந்த் மற்றும் கணேசன் ஆகியோர் அவரிடம் தகராறு செய்துள்ளனர். வாய்த் தகராறு முற்றியதால், கணேசன் தன்னிடம் வைத்திருந்த கத்தியால் மணிகண்டனைக் குத்திக் கொலை செய்திருக்கிறார். பின்னர், நிஷாந்த் உடன் சேர்ந்து ஜேம்ஸ் டவுன் பகுதியிலுள்ள குளத்தில் மணிகண்டன் உடலில் கல்லைக் கட்டி வீசியுள்ளனர்” என்றனர்.