பம்பையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் சபரிமலையில் பக்தர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

கேரளா மாநிலம் பத்தினம் திட்டா மாவட்டத்தில் சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. தற்போது, கார்த்திகை மாதம் பிறந்துள்ள நிலையில், ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்களின் வருகையும் நாளுக்கு நாள் அதிகரிப்பது வருவது வழக்கம். மண்டல பூஜையும், மகரவிளக்கு சீசனும் தொடங்கிவிட்டதால் இனி வரும் நாட்களில் பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், கேரளாவின் பத்தினம்திட்டா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பம்பை நதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பத்தினம்திட்டா மாவட்டத்தில் கடும் மழைப்பொழிவு இருப்பதால், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பக்தர்கள் வருவதற்கு இன்று ஒருநாள் மட்டும் தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
காக்கி-ஆனத்தோடு அணைகளில் இருந்து மதகுகள் எந்நேரமும் திறக்கப்படலாம் என்பதால், சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, இன்று ஒருநாள் மட்டும் பம்பை மற்றும் சபரிமலைக்கு பக்தர்கள் வருகைக்கு தடை விதிக்கப்படுவதாக பத்தினம்திட்டா மாவட்ட ஆட்சியர் திவ்யா எஸ் ஐயர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.




