மியான்மரில் ஆட்சி கவிழ்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இளைஞர்கள் ராணுவ ஜெனரல் மின் ஆங் ஹலேங்கின் முகத்தை காலணிகளில் ஸ்டிக்கராக ஒட்டி உள்ளனர்.
மியான்மரில் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி ராணுவத்தினர் அரசுத் தலைவரான ஆங் சாங் சூகி மற்றும் அனைத்து தலைவர்களையும் கைது செய்து ஆட்சியை கவிழ்த்து இராணுவத்தின் பிடியில் நாட்டை கீழ் கொண்டுவந்தனர்.
அதனையடுத்து கடந்த இரண்டரை மாதங்களாக மக்கள் அனைவரும் ராணுவத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் ,குழந்தைகள் என்று பாரபட்சம் பார்க்காமல் கிட்டத்தட்ட 700 பேரை ராணுவ பாதுகாப்பு படையினர் சரமாரியாக கொன்று குவித்துள்ளனர்
மேலும் ஆயிரக்கணக்கான மக்களையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இருப்பினும் மக்கள் ஜனநாயக கட்சி வேண்டும் என்று போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மியான்மரின் மிகப்பெரிய நகரமான யங்கோனில் இளைஞர்கள் தங்களின் காலணிகளின் அடிபாகத்தில் ஜெனரல் மின் ஆங் ஹலேங்கின் முகத்தை ஸ்டிக்கராக ஒட்டி போராட்டம் செய்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.