பிரபல நிறுவனத்தின் வாங்கிய கைகடிகாரத்தை பழுது பார்க்காமல் 6 மாதங்கள் வரை இழுதடித்து வந்த பிரபல கைக்கடிகார நிறுவன சேவை மையத்திற்கு 15 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த சுவாதி என்பவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் அளித்த புகார் மனுவில், தன்னுடைய உறவினர் அண்ணாநகரில் உள்ள பிரபல கைக்கடிகார விற்பனை நிறுவனமான P.ORR & SONS pvt ltd ல் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான Fossile என்ற விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை வாங்கி தனக்கு பரிசாக அளித்திருந்தாக குறிப்பிட்டுள்ளார். இந்தக் கைக்கடிகாரம் திடிரென பழுதானதால் கடந்த 2024 ம் ஆண்டு அண்ணாநகரில் உள்ள பிரபல கைக்கடிகார நிறுவன சேவை மையத்தில் பழுதுபார்ப்பதற்காக கொடுத்துள்ளார்.

அந்த சேவை மையம் பழுது பார்ப்பதற்கான செலவு தொகையான ரூ.2,700 வசூலித்து இரண்டு நாட்களில் சரி செய்து கொடுப்பதாக தெரிவித்திருந்தது. ஆனால், குறிப்பிட்ட காலத்தில் கைக்கடிகாரத்தை பழுது பார்க்காமல் 3 மாதங்களாக இழுத்தடித்து வந்துள்ளனர். சேவைக் குறைப்பாட்டால், தனக்கு ஏற்பட்ட மிகுந்த மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்க சம்பந்தப்பட்ட கைகடிகார நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி கோபிநாத், கவிதா கண்ணன், ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, சேவை குறைப்பாட்டிற்காக மனுதாரரிடம் எந்தவிதக் கட்டணமும் வசூலிக்காமல் கைக்கடிகாரத்தை சேவை மையம் ஒரு மாதத்துக்குள் பழுது பார்த்துக் கொடுக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் கைக்கடிகாரத்தின் மதிப்பான ரூ.50 ஆயிரத்தை வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். சேவை குறைபாடு, மன உளைச்சலுக்காக ரூ.10 ஆயிரமும், வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரமும் மனுதாரருக்கு வழங்க வேண்டும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.





