பட்டாசுக்கு தடை விதிப்பதன் மூலமாக பலர் வேலை இழப்பதை ஏற்கிறோம், அதேவேளையில் ஒருவர் வாழ்வதற்காக அரசியல் சாசனம் வழங்கி இருக்கும் உரிமை பறிக்கப்படுவதை ஏற்க முடியாது என பட்டாசால் ஏற்படும் காற்று மாசு தொடர்பாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

டெல்லி, பண்டிகை காலத்தில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்கக்கோரி தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, ஏ.எஸ்.போபண்ணா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
பட்டாசு வெடிக்க காலை 4 மணி நேரம் மாலை 4 மணி நேரம் என கால அளவை அதிகரிக்க மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதிபதிகளிடம், பண்டிகை காலம் என்பதால் பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை என பட்டாசு உற்பத்தியாளர்கள் தரப்பு மூத்த வழக்கறிஞர் ஏ.எஸ்.நத்கர்னி வாதத்தை முன்வைத்தார்.
அப்போது பேசிய எதிர் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், பட்டாசு தயாரிப்பில் பல உற்பத்தியாளர்கள் விதிமுறைகளை மீறினர்! அதிக காற்று மற்றும் சுற்றுசூழல் மாசுவை ஏற்படுத்தும் பேரியம் வேதிப்பொருள் கொண்டு பட்டாசு உற்பத்தி செய்யவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டும் அதை மீறி பேரியத்தை பயன்படுத்தினர். இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ விசாரித்து அறிக்கை சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார். இதன் மூலம் பட்டாசு உற்பத்தியாளர்கள் தொடர்ந்து விதிமுறை மீறல்களில் ஈடுபட்டதாக சிபிஐ விசாரணையில் கண்டறிந்திருப்பதாக தெரிகிறது என்றார்.
இதற்கு பதில் வாதம் வைத்த பட்டாசு உற்பத்தியாளர் தரப்பினர்,
பட்டாசு உற்பத்தியாளர்கள் விதி மீறினார்களா? என சி.பி.ஐ.யால் விசாரிக்கப்பட்டு சீலிடப்பட்ட கவரில் உள்ள அறிக்கையை பட்டாசு உற்பத்தியாளர்கள் தரப்புக்கு தர வேண்டும், அதனை படித்து உரிய விளக்கம் அளிப்போம். ஏனெனில் தற்போது பண்டிகை காலம் என்பதால் பட்டாசு உற்பத்தி, வேலை வாய்ப்பு என அனைத்துதையும் கணக்கில் எடுக்க வேண்டும். இந்த பட்டாசு உற்பத்தி என்பது பலரின் வாழ்வாதாரம் ஆகும் என்பதால் ஒரு சில உற்பத்தியாளர்கள் விதிமுறை மீறல்களில் ஈடுபட்டால், அவர்களை மட்டுமே தண்டிக்க வேண்டும்
ஆனால் ஒட்டுமொத்தமாக பட்டாசு தொழிலுக்கு தடை விதிக்கக் கூடாது என கேட்டுக்கொண்டனர்.
அப்போது பேசிய நீதிபதிகள், பட்டாசு வெடிக்க தடை விதிப்பதன் மூலமாக நிறைய பேர் வேலை இழந்திருக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறோம்!! அதேவேளையில் ஒருவர் வாழ்வதற்காக அரசியல் சாசனம் வழங்கி இருக்கும் உரிமை பறிக்கப்படுவதை ஏற்க முடியாது என கருத்து தெரிவித்ததோடு வழக்கை பிற்பகல் 2 மணிக்கு தள்ளிவைத்தனர்.




