உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார். நீதிபதியின் மறைவுக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் (78), சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில் வசித்து வந்தார். உடல்நலக்குறைவு காரணமாக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று காலை உயிரிழந்தார். இவரது உடல் தேவக்கோட்டைக்குக் கொண்டுச் செல்லப்பட்டு, அங்கு இறுதி சடங்குகள் நடைபெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன், மாசு கட்டுபாடு மற்றும் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு, வழக்கு ஒன்றில் பொது இடத்தில் புகைப் பிடிக்க தடை விதித்து, தீர்ப்பளித்ததன் மூலம் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டார். மேலும் இவர், சென்னை மற்றும் கேரள உயர் நீதிமன்றங்களில் நீதிபதியாகப் பதவி வகித்தவர். பின்னர் ராஜஸ்தான் மற்றும் ஆந்திர உயர் நீதிமன்றங்களில் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியவர்.
இவர் சட்ட ஆணையத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். மேலும், இவர் முல்லைப்பெரியாறு ஆய்வுக் குழுவிலும் இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2002-ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 2007-ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
லட்சுமணனின் மனைவி மீனாட்சி, உடல்நலக்குறைவால் காரைக்குடி தனியார் மருத்துவமனையில் இரு தினங்களுக்கு முன் உயிரிழந்த நிலையில், தற்போது லட்சுமணனும் உயிரிழந்துள்ளது அனைவர் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் நீதிபதி லட்சுமணன் மறைவுக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “தமிழ்நாட்டுக்கும் சிவகங்கை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த உச்ச நீதிமன்ற நீதிபதி திரு ஏ. ஆர். லக்ஷ்மணன் அவர்களின் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.