இன்று முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படுவதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வரும் நிலையில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த சில மாதங்களாக திருப்பதியில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதையடுத்து பக்தர்களுக்கு சில கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக திருப்பதியில் தரிசனம் செய்ய வரக்கூடிய பக்தர்கள் ஒவ்வொருவரிடமும் 300 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதிலும், முக்கிய நபர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்வதற்கு அனுமதி கொடுக்கப்பட்டு வந்தது. தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் வீதம் கட்டண தரிசனதில் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
ஆனால் இன்று முதல் திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என திருமலை திருப்பதி தேவஸ்தான போர்டு அறிவித்துள்ளது. முதல்கட்டமாக உள்ளூரை சேர்ந்த 2000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்படும் எனவும் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.