நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் 12 முறை சாம்பியனும், உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ரபெல் நடால் (ஸ்பெயின்), 14-வது இடத்தில் உள்ள டிகோ ஸ்வாட்ஸ்மேனை (அர்ஜென்டினா) எதிர்கொண்டார்
3 மணி 9 நிமிடம் நீடித்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் நடால் 6-3, 6-3, 7-6 (7-0) என்ற நேர்செட்டில் ஸ்வாட்ஸ்மேனை வீழ்த்தி 13-வது முறையாக இறுதிப்போட்டியை எட்டினார். பிரெஞ்ச் ஓபனில் நடாலின் 99-வது வெற்றி இதுவாகும். நாளை நடக்கும் இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச்-ஐ சந்திக்கிறார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் மகுடத்துக்காக இன்று (சனிக்கிழமை) நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனும், உலகத் தரவரிசையில் 6-வது இடத்தில் இருப்பவருமான 21 வயது சோபியா கெனின் (அமெரிக்கா), தரவரிசையில் 54-வது இடத்தில் உள்ள போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக்கை சந்திக்கிறார். இருவரும் நேருக்கு நேர் மோத இருப்பது இதுவே முதல்முறையாகும்.
இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்2 நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.