நண்பன் திரைப்பட பாணியில் ஓடும் ரயிலில் இளம் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மாற்றுத்திறனாளி பாராட்டுக்கள் தெரிவிக்கின்றனர்.
டெல்லி :
நண்பன் திரைப்படத்தில் நடிகர் விஜய் வீடியோ அழைப்பில் மருத்துவருடன் பேசி பிரசவம் பார்ப்பது போல ஓடும் ரயிலில் ஒரு பெண்ணுக்கு 30 வயது மாற்றுத்திறனாளி ஆண் ஒருவர் பிரசவம் பார்த்துள்ளார். சம்பர்க்கிராந்தி சிறப்பு ரயில் டெல்லியில் இருந்து மத்திய பிரதேசத்தின் ஜவத்ப்பூருக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. பரிதாபாத்தை தாண்டியபோது ஒரு பெட்டியில் மிடில் பெட்-ல் படுத்திருந்த பெண் பயணி வலியால் துடித்தார். வேறு பெண்கள் யாரும் அந்த பெட்டியில் இல்லாததால் அதேபெட்டியில் அடுத்த பகுதியில் பயணித்த பிரஜாபதி என்ற மாற்றுத்திறனாளி உதவ கோர, அந்த பெண் மறுத்துவிட்டார்.
சற்று நேரத்தில் மீண்டும் அந்த பெண் வலியால் துடித்த பிறகே, பிரசவ வலி என்று அந்த பெண்ணுக்கும், லேப் டெக்னீஷியனான பிரஜாபதிக்கும் புரிந்தது. தனது மூத்த மருத்துவர் சுபர்ணாசென்-ஐ வீடியோ அழைப்பில் தொடர்புகொண்ட மாற்றுத்திறனாளி, பிரச்சனையை எடுத்துரைத்து நண்பன் சினிமா போல அவரது உதவியை நாடினார். மனத்துணிவுடன் செயல்பட்ட பிரஜாபதி, குளிருக்கு போர்த்திக் கொண்டிருந்த சால்வையில் இருந்து ஒரு நூல் மற்றும் முகசவரத்திற்கு வைத்திருந்த பிளேடு உதவியுடன் வீடியோவில் மருத்துவர் அளித்த அறிவுரைப்படி பிரசவம் பார்த்துள்ளார். பிரசவ வலியால் துடித்த அந்த பெண்ணும், குழந்தையை கையால் வாங்கியவுடன் நிம்மதி பெருமூச்சு விட்டார்.
மதுரா ரயில் நிலையம் ரயில்வே பெண் போலீசார் சென்று தாயையும், சேயையும் மதுரா மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். விசாரணையில், சகோதரர் மற்றும் ஒரு பெண் குழந்தையுடன் ரயிலில் பயணித்த கர்ப்பிணி பெண் கிரண் என்பதும் ஏற்கனவே இவருக்கு மூன்று முறை கருக்கலைப்பு ஆனதும் தெரியவந்தது. உரிய நேரத்தில் சாதுர்யமாக செயல்பட்டதால் தாயும், சேயும் காப்பாற்றப்பட்டுள்ளனர். சினிமாவை மிஞ்சும் வகையில் மனத்துணிவுடன் செயல்பட்டு 2 உயிர்களை காப்பாற்றிய பிரஜாபதிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.