சென்னை: தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் 75 சதவீத கல்விக்கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்கியுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
கொரோனாவினால் போடப்பட்ட ஊரடங்கின் காரணமாக பலர் வருமானமின்றி தவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே முந்தைய விசாரணையில் தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணம் வசூலிப்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி,இன்று தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், தனியார் 75 % சதவீத கல்விக்கட்டணத்தை 3 தவணைகளாக வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் தற்போது 25% ம், பள்ளிகள் திறந்த பிறகு 25% ம், பள்ளிகள் திறந்த பிறகு மீண்டும் 25% ம் கல்விக்கட்டணத்தை வசூலிக்கலாம் என தெரிவித்துள்ளது. மேலும் மீதமுள்ள கட்டணத்தை வசூலிக்க பெற்றோர்களை நிர்பந்திக்ககூடாது என கூறிய தமிழக அரசு, தனியார் பள்ளிகளின் கல்விக்கட்டணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு முடிவெடுக்கும் எனவும் தெரிவித்துள்ளது.