தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.. தமிழக அரசு விதித்துள்ள தடையை மீறி இந்து அமைப்பினர் பொது இடங்களில் வைத்த விநாயகர் சிலைகளை போலீசர் பறிமுதல் செய்தனர். இதனால் சில இடங்களில் வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
தமிழகம் முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் விநாயகர் சதுர்த்தி விழா வெகுவிமர்சையாக இந்து மக்களின் இல்லங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து வழிபாட்டு தலங்களிலும் விநாயக பெருமானுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளுடன் பக்தர்களுக்கு பிரசாதங்களும் வழங்கப்பட்டன. இதில், ஏராளமாக பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக இந்து அமைப்புகளால் பொது இடங்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை வைக்க கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் தமிழக அரசு தடை விதித்தது. இதற்கு மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு சுட்டிக்காட்டியது. ஆனால், இதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பை தெரிவித்ததோடு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். ஆனால், நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுத்து தள்ளுபடி செய்து விட்டது.
தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் தமிழக அரசின் தடையை மீறி இந்து அமைப்பினர் விநாயகர் சிலைகளை வைத்தனர். இந்த சிலைகளை போலீசாரும், வருவாய்த் துறையினரும் பறிமுதல் செய்து அப்புறப்படுத்தினர். இதனால் இந்து அமைப்பினர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவங்கள் தொடர்பாக பலர் மீது வழக்கு தொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.