இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலிக்கு சொந்தமான உணவகத்தில் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்து சர்ச்சையாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்குச் சொந்தமான, ‘ஒன்8 கம்யூன்’ என்று பெயரிடப்பட்ட உணவகம் புனே, கொல்கத்தா மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் இயங்கி வருகின்றன. இதில் புனே கிளையில் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என அந்த அமைப்பினர் இன்ஸ்டாகிராமில் இட்ட பதிவு வைரலாகி, சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
அந்த இன்ஸ்டா பதிவில், ”உங்கள் உணவகங்கள் பாகுபாடு காட்டுகின்றன விராட் கோலி. உங்களுக்குத் தெரியாமல் கூட இருக்கலாம். ஆனால் ஒரு பிரிவினருக்கு இடையே இத்தகையை பாகுபாட்டை ஏற்றுக்கொள்ள முடியாதது. உங்கள் உணவகங்களில் மற்ற இடங்களிலும் இதே பாகுபாடு கடைப்பிடிக்கப்படுகிறது. நீங்கள் உடனடியாக இதை மாற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பதிவிட்டு அதில் விராட் கோலியை ‘டேக்’ செய்து தன்பாலின ஈர்ப்பாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆனால் அவர்களின் இக்குற்றச்சாட்டை ‘ஒன்8 கம்யூன்’ உணவக நிர்வாகம் மறுத்துள்ளது.