இன்று முதல் ஏப்ரல் 4ம் தேதி வரை சென்னை,காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 26 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் அனல் காற்று வீசும் எனவும் மழைக்கு வாய்ப்பில்லை எனவும் இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக அந்தமான் ஒட்டிய கடல் பகுதிக்கு அடுத்த 24 மணி நேரம் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இன்று முதல் ஏப்ரல் 4ம் தேதி வரை ஒருசில இடங்களில் அனல்காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலையில் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
சென்னை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை தரைக்காற்று வடமேற்கு திசையிலிருந்து தமிழக பகுதி நோக்கி வீசப்படும். இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் ராணிப்பேட்டை உள்ளிட்ட 26 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்கும் ,புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட நான்கிலிருந்து 6 டிகிரி செல்சியஸ் வரை உயரும்.
இதன் காரணமாக பொதுமக்கள், விவசாயிகள், தேர்தல் வேட்பாளர்கள், வாக்காளர்கள் மற்றம் போக்குவரத்து காவலர்கள் நண்பகல் 12 மணி முதல் 4 மணி வரை திறந்து வெளியில் வேலை, ஊர்வலம் செல்வதை தவிர்க்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.




