நாட்டின் 15வது குடியரசுத்தலைவராக திரவுபதி முர்மு பதவியேற்றுக்கொண்டார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிகாலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் புதிய குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரவுபதி முர்மு இன்று முறைப்படி பதவியேற்றுக்கொண்டார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பாரம்பரிய முறைப்படி ஊர்வலமாக வந்து 21 குண்டுகள் முழங்க, பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் நாட்டு மக்களிடையே திரவுபதி முர்மு உரையாற்றினார்.
அப்போது ,பேசிய அவர், “இந்திய நாட்டு மக்களின் வளமான எதிர்காலத்திற்காக பணியாற்றுவேன். என்னை தேர்ந்தெடுத்த எம்பிக்கள், எம்எல்ஏக்களுக்கு நன்றி. நாட்டின் முதல் பழங்குடியின குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் மகிழ்ச்சி. அடுத்த 25 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டம் தயாராகும் நேரத்தில் சேவையாற்ற வாய்ப்பு கிடைத்தது என் பாக்கியம். சாதாரண கவுன்சிலராக தொடங்கி குடியரசுத்தலைவராக உயர்ந்தது ஜனநாயகத்தின் தாயகமான இந்தியாவின் மகத்துவம். ஏழை வீட்டில் பிறந்த மகள் நான், குடியரசு தலைவராக முடியும் என்பது ஜனநாயகத்தின் சக்தி. பெண்கள், இளைஞர்கள் நலனில் தனிக்கவனம் செலுத்துவேன். என்னுடைய உயர்வு கோடிக்கணக்கான பெண்களின் கனவுகளுக்கான திறவுகோலாக இருக்கும்” இவ்வாறு தெரிவித்தார்.
இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு,மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள்,எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.
-பா.ஈ.பரசுராமன்.