தமிழகத்தில் அனைத்து குடும்பங்களுக்கும் குடும்ப சுகாதார அட்டை வழங்கும் திட்டம்செயல்படுத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது: மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் ஒருபகுதியாக இந்த திட்டம் செயல்படுத்தப்படும். இந்த அட்டையில் குடும்ப உறுப்பினர்களின் பெயர், வயது, தொழில் மற்றும் மருத்துவ குறிப்புகள் இடம்பெற்றிருக்கும். இத்திட்டத்தின் கீழ் வீடுகளுக்கே சென்று ரத்த அழுத்த பரிசோதனை மற்றும் சர்க்கரை பரிசோதனை செய்யப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படும். சென்னை மாநகராட்சியில் சில குடும்பங்களுக்கு இந்த அட்டை வழங்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 5.98 கோடி பெரியவர்கள் உள்ளனர். அவர்களில் 4.48கோடி பேர் கடந்த ஒரு ஆண்டில் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 33 லட்சம் பேர் உயர் ரத்த அழுத்தம் நோயாலும், 23.1லட்சம் பேர் சர்க்கரை நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.1.68 லட்சம் பேருக்கு ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் இரண்டும் இருக்கிறது. சென்னையை பொறுத்தவரை இதுவரை 17 லட்சம் பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1.9 லட்சம் பேர் உயர் ரத்த அழுத்தத்தாலும், 1.5 லட்சம் பேர் சர்க்கரை வியாதியாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக சென்று மருந்து பெட்டகங்களை வழங்கி வருகிறார்கள். இதுவரை 83 லட்சம் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.