சுகாதாரத்துறையை டிஜிட்டல் மயமாக்கி ஒவ்வொரு குடிமகனுக்கும் அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு வகுத்து வருகிறது.

நாட்டின் சுகாதாரத்துறையை அடுத்தகட்ட நகர்வை நோக்கி கொண்டு செல்லும் வகையில், முழுமையாக தொழில்நுட்பத்தை புகுத்தி அதனை டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் முன்மொழிவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படும் நிலையில், இதன் மீதான இறுதி முடிவு இந்த வார இறுதிக்குள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
பிரத்யேக செயலியின் மூலம் நான்கு முக்கிய அம்சங்களை கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஒவ்வொரு குடிமகனுக்கும் தேசிய அளவிலான மருத்துவ அடையாள அட்டை, தனிநபர் மருத்துவ விபரங்கள், ஆன்லைன் மூலம் மருத்துவரின் உதவியை பெறுவது மற்றும் மருத்துவமனைகளின் சுகாதார வசதிகள் ஆகியவற்றை இந்த செயலியில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், டிஜிட்டல் மருந்தகம், தொலைதூர மருத்துவ வசதி ஆகியவை தொடர்பான வழிமுறைகளும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ், அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள், மருத்துவமனைகள், ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்களை இணைத்து, மருத்துவத்துறைசார்ந்த அனைத்து பரிவர்த்தனை மற்றும் ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளது.
சுமார் ரூ. 470 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டத்தின் மூலம் தேசிய சுகாதாரத்துறையின் செயல்திறன், செயல்பாடு மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்த முடியும் எனக் கூறப்படுகிறது. மேலும், ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி எனும் இலக்கை அடைவதற்கான நாட்டின் முயற்சி துரிதமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, வரும் சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் இந்த திட்டம் தொடர்பாக பிரதமர் மோடி அறிவிப்பார் எனக் கூறப்படுகிறது.