மகளுக்கு பேய் பிடித்துவிட்டதாக கூறி மகளை பெற்றோர்கள் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மாவட்டத்தை சேர்ந்த சித்தார்த் சிம்னி – ரஞ்சனா தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஒருவருக்கு 16வயது மற்றொரு குழந்தைக்கு 5 வயது. கடந்தமாதம் தஹல்கட் பகுதியில் உள்ள தர்காவிற்கு சித்தார்த் குடும்பத்துடன் சென்றுள்ளார். அங்கு சென்று வந்த பின்னர் தனது இரண்டாவது மகளின் (5) நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பேய் பிடித்துவிட்டது என நம்பிய பெற்றோர் மாந்திரீக செயலில் ஈடுபட்டுள்ளனர்.

சித்தார்த் சிம்னி, ரஞ்சனா மற்றும் அவரது உறவினர் பிரியா (32) மூவரும் சேர்ந்து பதில் சொல் என்று கூறி சிறுமியின் கண்ணம் மற்றும் உடல்களில் தாக்கியுள்ளனர். அதை வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளனர். இதில் அடிதாங்க முடியாமல் சிறுமி மயங்கி விழுந்துள்ளார். பின் தர்காவிற்கு கூட்டி சென்ற அவர்கள் அதன்பிறகு மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். இதில், சந்தேகமடைந்த காவலாளி அவர்கள் வந்த காரின் எண்ணை புகைப்படம் எடுத்துள்ளார். மருத்துவர்கள் பரிசோதனையில் அந்த குழந்தை ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. பின் காவல்துறைக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. காவலாளி கொடுத்த புகைப்படத்தின் உதவியுடன் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அந்த வீடியோவையும் கைப்பற்றினர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




