பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அணைக்கரை பாலத்தில் ஆம்புலன்ஸிற்கு வழிவிடாமல் காத்திருக்க வைத்து சென்றதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலானது.
இந்த வீடியோ பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது. இந்த நிலையில்,இதுதொடர்பான அறிக்கை ஒன்றை தஞ்சாவூர் மக்கள் தொடர்பு அலுவலர் வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:தஞ்சாவூர் மக்கள் நலனில் அக்கறைக்கொண்டு கடந்த 5 மற்றும் 6ம் தேதிகளில் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினையும், மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் விதமாக,மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளையும் அமைச்சர் பார்வையிட்டார். கடந்த 5ம் தேதி மட்டும் கல்லணை முதல் அணைக்கரை மதகுசாலைவரை கொள்ளிடம் ஆற்றின் கரையில் (பயணம் 81 கி.மீ தூரத்தினை) காலை முதல் மாலை வரை சுமார் 12 மணி நேரம் பயணம் செய்து மக்களுக்கு செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வுசெய்தார்கள்.

பின்னர் தஞ்சாவூர் மாவட்டர் அணைக்கரை(கீழணை)ஆய்வு மாளிகையில் அரசு அலுவலர்களுக்கான கூட்டம் ஏற்பாடு செய்ததனால் அணைக்கரை பாலம் வழியாக ஆய்வுமாளிகைக்கு சென்றார். அணைக்கரை பாலத்தின் பாலம் என்பது ஒருவழியாக மட்டுமே செல்லக்கூடிய பாலம். ஒரு வழியாக வாகனங்கள் வந்தால் மறுபுறத்தில் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படும். இதுதான் அன்றும் நடந்தது. கொள்ளிடம் ஆற்றின் வலதுகரையோரம் ஆய்வு செய்துவிட்டு அணைக்கரை பாலத்திற்குள் அமைச்சர் அவர்களின் பாதுகாப்பு வாகனங்களும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் வாகனமும், பொதுப்பணித்துறை,நீர்வளத்துறை,தீயணைப்புத்துறை என அனைத்து துறை வாகனங்களும் நுழைந்தது. 1 கி.மீ தூரம் கொண்ட பாலத்தின் மையப்பகுதியில் துறை அலுவலர்களின் வாகனங்கள் செல்லும்போதுதான் மறுபுறம் அவசர ஊர்தி (ஆம்புலன்ஸ்)வந்துள்ளது. பாதுகாப்பு அலுவலர்களின் துரிதமான முடிவினால் அவசர ஊர்திக்கான வழி விரைவில் கிடைத்தது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




