வருமான வரி செலுத்துவோர் வரும் அக்டோபர் 1ம் தேதிமுதல் அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் சேர முடியாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
18வயது முதல் 40 வயது வரையிலான இந்திய குடிமகன்கள் மத்திய அரசின் ‘அடல் பென்சன் யோஜனா’ திட்டத்தில் சேரலாம். இத்திட்டத்தில் சேருவோர் அளிக்கும் பங்களிப்பை பொறுத்து மாதம் ₹1,000 முதல் ₹5,000 வரை ஓய்வூதியம் வழங்கப்படும். சந்தாதாரர்கள் முன்னரே இறந்துவிட்டால் அவரது நாமினிக்கி அந்த பணம் வழங்கப்படும். இந்த நிலையில் மத்திய அரசு இத்திட்டம் தொடர்பான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: அக்டோபர் 1,2022 முதல் வருமான வரி செலுத்துபவராக இருக்கும் எந்தவொரு குடிமகனும் அடல் பென்சன் யோஜனா திட்டத்தில் சேரத் தகுதி பெறமாட்டார்கள். “வருமான வரி செலுத்துபவர்” என்பது வருமான வரிச்சட்டம் 1961ன் படி திருத்தப்பட்ட வருமான வரி செலுத்த வேண்டியவர் என்ற பொருள்படும். புதிய விதிகளின் படி அக்டோபர் 1ம் தேதி அல்லது அதற்கு பிறகு வருமான வரி செலுத்துபவராக இருப்பது கண்டறியப்பட்டால் அவரது அடல் பென்சன் யோஜனா கணக்கு முடக்கப்பட்டு, அதுவரையில் செலுத்திய ஓய்வூதிய தொகை திருப்பி செலுத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.