அகஸ்தியர் மலையை யானைகள் காப்பகமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது, பொதிகை மலை. இது பல்வேறு சிறப்புகளை கொண்டது. இந்த மலையில் உட்கார்ந்து அகஸ்தியர் தமிழை வளர்த்ததாக கூறுவார்கள். இங்கு அகஸ்தியருக்கு கோயில் உள்ளது. அடர்வனமாக இருப்பதால் இந்த கோயிலுக்கு பக்தர்கள் 2 நாட்கள் இரவு, 3 நாட்கள் பகல் என கடுமையான நடைபயணம் மேற்கொண்டு பாபநாசம், கரையாறு அணை, பாணதீர்த்த அருவி, பேயாரு ஆகியவற்றை கடந்து பொதிகை மலைக்கு செல்வார்கள்.

1995ம் ஆண்டு வரை பக்தர்கள் இந்த மலைக்கு சென்று வந்த நிலையில் களக்காடு புலிகள் சரணாலயத்தை கணக்கில் கொண்டு இந்த வழியாக பக்தர்கள் செல்வதற்கு 2002ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டது. இதனால் மலையின் பின்புரம் திருவனந்தபுரம் வழியாக பக்தர்கள் பொதிகை மலைக்கு செல்கின்றனர். இந்த மலை 6ஆயிரம் சதுர கி.மீ பரப்பளவை கொண்டது. இங்கு 121 வகை உயிரினங்கள், 157வகை ஊர்வன விலங்குகள் மற்றும் அறிய வகை தாவரங்களும் காணப்படுகிறது. இந்த நிலையில் யானைகள் தினத்தையொட்டி மத்திய அரசு அகஸ்தியர் மலையை யானைகள் காப்பகமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே 4 யானை காப்பகங்கள் தமிழகத்தில் உள்ள நிலையில் இதை 5வது காப்பகமாக அறிவித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.




