டோலோ 650 மாத்திரையை பரிந்துரைக்கும் மருத்துவர்களுக்கு ₹1,000 கோடி மதிப்பிலான பரிசுபொருள்கள் கொடுத்துள்ளதை கேட்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்திய மருத்துவ மற்றும் விற்பனை பிரதிநிதிகள் கூட்டமைப்பு சார்பில், உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. தங்கள் நிறுவனம் தயாரிக்கும் மருந்துகளை அதிக அளவில் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கும் மருத்துவர்களுக்கு (குறிப்பாக டோலோ 650 மாத்திரைகளை) ஊக்கத்தொகை என்ற பெயரில், விலை உயர்ந்த பரிசு பொருட்கள், வெளிநாட்டு பயணங்கள் என ₹1,000 கோடியை டோலோ 650 மாத்திரையை தயாரிக்கும் நிறுவனம் செலவழித்துள்ளது என அந்த பொதுநல வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் பாரிக் தெரிவித்தார்.
இதை கேட்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய நீதிபதி சந்திரசூட், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டபோது தனக்கும் கூட இதே மாத்திரைகளை பரிந்துரைத்ததாக கூறினார். மேலும், இது தீவிரமான பிரச்சனை. உடனடியாக கவனிக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் 10 நாள்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.




