கேரளாவில் 59 வயது தாய்க்கு இரண்டாவது திருமணம் செய்துவைத்த மகளை பலரும் பாராட்டி வருகின்றனர்.
கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ரதிமேனன் (59). இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள். இரண்டு மகள்களுக்கும் திருமணம் ஆன நிலையில் ரதிமேனன் தனிமையில் வசித்து வந்தார்.
அம்மாவின் தனிமையை உணர்ந்த மகள் பிரசிதா அவருக்கு திருமணம் செய்து வைத்துவிடலாம் என்று முடிவு செய்தார். இதையடுத்து தனது அம்மாவிற்கு பொருத்தமான மனமகனை தேட ஆரம்பித்தார். இந்த சூழ்நிலையில், அதே பகுதியில் மனைவியை இழந்து தனிமையில் வாழ்ந்து வரும் திவாகரன் (63) தனது தாய்க்கு ஏற்ற துணை என்று முடிவு செய்தார். திவாகரன் வேளாண் பல்கலைக்கழகத்தில் பணி செய்து ஓய்வுபெற்றவர். அவரிடம் ஒப்புதல் பெற்றப்பின் திருமணமான அவரது மகள்களிடம் ரதிமேனன், திவாகரன் திருமணம் குறித்து பேசியுள்ளார். அவரது மகள்களும் ஒப்புதல் அளிக்கவே, திருச்சூர் திருவம்பாடி கோயிலில் இருவருக்கும் திருமணத்தை நடத்தி வைத்தார்.
இதுகுறித்து மகள் பிரசிதா கூறுகையில்: அப்பா உயிருடன் இருக்கும் போதே எங்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. அப்பா இறந்தபின்பு எங்களால் தொடர்ச்சியாக வந்து அம்மாவை நேரில் பார்க்க முடியவில்லை. அம்மாவின் தனிமை நிலையை போக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அதற்காகத்தான் இந்த திருமண ஏற்பாடு என்று கூறினார். அம்மாவிற்கு திருமணம் செய்து வைத்த மகளின் இந்த துணிச்சலான முடிவை அனைவரும் பாராட்டி, வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.