அரசுப்பேருந்து ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்த 7ம் கட்ட பேச்சுவார்த்தை, குரோம்பேட்டை மாநகர் போக்குவரத்து கழக பயிற்சி மைய வளாகத்தில் நேற்று நடந்தது. 7 கட்டங்களாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் இன்று காலை 11:00 மணிக்கு பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கியது.
இந்நிலையில், பேச்சுவார்த்தையின் முடிவில் அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் (5%) இன்று கையெழுத்தானது. அதன்படி, குறைந்தபட்ச ஊதிய உயர்வு ஓட்டுநருக்கு ₹2,012, அதிகபட்சமாக ₹7,981 ஆகவும், நடத்துநருக்கு குறைந்தபட்ச ஊதிய உயர்வு ₹1,965, அதிகபட்ச ஊதிய உயர்வு ₹6,440 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
பேச்சுவார்த்தையில் 66 தொழிற்சங்கங்கள் கலந்துகொண்டனர். இதில் சிஐடியூ, ஏஐடியூசி ஒப்பந்தம் இறுதி செய்ததை ஏற்கவில்லை. இதனால் அந்த தொழிற்சங்கத்தினர் ஊதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் வெளிநடப்பு செய்தனர்.மேலும், 4 ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை என்பதில் உடன்பாடு இல்லை என்றும் தெரிவித்தனர்.