உபியில் மூன்று பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த சாமியாரை போலீசார் கைது செய்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோ மாவட்டத்தில் உள்ள மச்சிலி பகுதியை சேர்ந்தவர் ஷியம்பிஹாரி. இவர் மக்களின் பிரச்சனைகளை தீர்த்து வைப்பதாக கூறி இரவு நேரங்களில் அமானுஷ்ய வேலைகளை செய்து வந்துள்ளார். இதை நம்பிய மூன்று பெண்கள் அவரிடம் தங்கள் குறைகளை சொல்லி புலம்பியுள்ளனர். அந்த பெண்களிடம் பிரச்சனைகளை சரிசெய்கிறேன் என்று சொல்லி ₹7ஆயிரம் வாங்கியுள்ளார் ஷியம்பிஹாரி. மேலும், நள்ளிரவு 12 மணிக்கு நீங்கள் மூன்று பேரும் யாருக்கும் தெரியாமல் வரவேண்டும். சில பூஜைகள் செய்ய வேண்டியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
இதை நம்பிய அந்த மூன்று பெண்களும் இரவு 12 மணிக்கு அந்த சாமியாரின் இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது, போதை மருந்தை தீர்த்தத்தில் கலந்து வைத்திருந்த அந்த சாமியார் பரிகாரம் என்று சொல்லி தீர்த்தத்தை குடிக்கச் சொல்லி இருக்கிறார். அந்த தீர்த்தத்தை குடித்த மூன்று பெண்களும் சுயநினைவை இழக்க, சாமியார் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை தாமதமாக உணர்ந்த அந்த மூன்று பெண்களும் பணத்தை திருப்பி தருமாறு ஷியம்பிஹாரியிடம் கேட்டுள்ளனர். பணத்தை திருப்பிக் கொடுக்க அவர் மறுக்கவே போலீசில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த சாமியாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.