ஆந்திரா முழுவதும் பின் தங்கிய பகுதிகளில் 111 புதிய கோயில்களை கட்ட திருமலா திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள மிகப்பெரிய கோயில் தேவஸ்தான போர்டுகளில் ஒன்று திருமலா திருப்பதி தேவசம் போர்டு. திருப்பதி ஏழுமலையான் கோயிலை சார்ந்துள்ள இந்த தேவசம் போர்டுக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் வருவாய் வருகிறது. இந்த நிலையில் திருமலா திருப்பதி தேவசம் போர்டு சார்பில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 111 புதிய கோயில்களை கட்ட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த கோயில்கள் ஆந்திராவில் உள்ள 26 மாவட்டங்களில் எஸ்சி,எஸ்டி, பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் கட்டப்படவுள்ளது.
இதுகுறித்து பேசிய நிர்வாக அலுவலர் தர்மரெட்டி, “திருப்பதி தேவசம் போர்டு சார்பில் இந்து சனாதன தர்மத்தை பரப்பும் வகையில், 111 புதிய கோயில்களை கட்டி பெருமாளின் புகழ் பரப்பப்படும். ஏற்கெனவே, முதல் கட்டமாக 502 கோயில்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த 111 கோயில்களின் கட்டுமானத்திற்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆலய நிர்மனம் என்ற நிதியிலுள்ள தொகை செலவிடப்படும். தற்போது கட்டப்பட்டு வரும் பத்மாவதி தாயார் மருத்துவமனையும் விரைவில் கட்டி முடிக்கப்படும்” என்று கூறினார்.




