காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, நாடு முழுவதும் பயணித்து மக்களை சந்திக்கும் ‘இந்திய ஒற்றுமை பயணத்தை’ மேற்கொண்டு வருகிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கன்னியாகுமரியில் தொடங்கிய அவரது பயணம் தற்போது காஷ்மீரில் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
நூறு நாட்களுக்கு மேலாக நடைபெற்று வரும் இந்த பயணம் வரும் 30ம் தேதி நிறைவுபெறுகிறது. இந்நிலையில் ராகுல் காந்தியுடன் பயணித்து வரும் காங்கிரஸ் தொண்டர்களுடன், மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளர் ஜோதி பொன்னம்பலமும் பயணித்து வருகிறார். ராகுலுடன் மேற்கொள்ளும் பயணம் இந்தியா குறித்த தனது பார்வையையே மாற்றியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளராக இருக்கும் ஜோதி பொன்னம்பலம், காங்கிரஸ் சார்பாக பல முன்னெடுப்புகளை எடுத்து வருபவர். மத்திய அரசு தொடர்ந்து கேஸ் சிலிண்டர் விலை உயர்வை அறிவித்தபோது, சென்னையில் கடும் போராட்டத்தில் ஈடுபட்டவர். மேலும் சோனியா காந்தி, ராகுல் ஆகியோர் மீது நேஷனல் ஹெரால்டு வழக்கை அமலாக்கத்துறை தொடர்ந்தபோது, அதற்கு எதிராக குரல் கொடுத்தவர். செப்டம்பர் 8ம் தேதி ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கியவுடன், தொண்டர்களுடன் தொண்டராக தானும் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
இந்த பயணம் இந்தியா குறித்த தனது பார்வையையே மாற்றியுள்ளதாக அவர் கூறியுள்ளார். ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று அங்கு பல்வேறு மொழி பேசும் மக்களை சந்தித்து, அவர்களின் மாறுபட்ட கலாசாரத்தை புரிந்துகொண்டால்தான் அவர்களுடைய பிரச்சனை என்ன என்பதை பற்றியும், அதனை தீர்ப்பது பற்றியும் நமக்கு ஆழ்ந்த புரிதல் ஏற்படும் என கூறுகிறார்.ராகுலின் பயணத்தில் எளிய மக்கள் அவருக்கு கொடுத்த வரவேற்பு, ராகுலின் எளிமை, வேறுபாடு இல்லாமல் அனைத்து மக்களிடமும் சகஜமாக பழகும் அவருடைய ஆளுமை, மேலும் இந்தியாவின் பிரச்சனை குறித்த அவரது கூர்மையான அவதானிப்பு, அதனை தீர்ப்பதற்கான வழியை கண்டடையும் முறை ஆகியவை தனக்கு பாடமாக அமைந்ததாக ஜோதி பொன்னம்பலம் தெரிவிக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
இந்திய ஒற்றுமை பயணத்தில் குமரியில் இருந்து காஷ்மீர் வரை ராகுல் காந்தியுடன் இருந்துள்ளேன். நாங்கள் இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் மூளை முடுக்கிற்கெல்லாம் சென்று மக்களை சந்தித்தோம். அவர்களுடைய பிரச்சனைகளை கேட்டறிந்தோம். இந்தியாவின் பிரிவினைவாதம் தலைதூக்கி இருக்கும் நிலையில், பலதரப்பட்ட மக்களின் எண்ணப்போக்கை ஆராய்ந்தோம்.
உண்மையில் மக்கள் தங்களுக்கு ஒற்றுமையாகத்தான் இருக்கின்றனர். பல்வேறு ஜாதி, மதம், இனம், மொழி என்பதை கடந்து தங்களுக்குள் அன்பை பரிமாறிகொள்கின்றனர். ஆனால் மத்தியில் ஆளும் அரசும், பாஜகவும் அவர்களிடையே வெறுப்புணர்வை விதைக்கின்றன. மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் எளியவரை வதைப்பதாக இருக்கிறது. ஒரு சாராரை மட்டும் உயர்த்தி பிடிப்பதாக இருக்கிறது. இளைஞர்கள் பலரும் வேலைவாய்ப்பை இழந்துவருவதாக எங்களிடம் கூறினர். பெண்கள் பல்வேறு இடங்களில் தங்களுக்கு உள்ள பாதுகாப்பின்மையை வெளிப்படுத்தினர். பல்வேறு ஆளுமைகள் ராகுல் காந்தியை பயணத்தின்போது சந்தித்தனர். முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராய், எழுத்தாளர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் எங்களுடன் இந்திய ஒற்றுமை பயணத்தில் கலந்துகொண்டனர். இதில் சிறப்பு என்னவென்றால், ஒரு பக்கம் பல்வேறு ஆளுமைகள், இன்னொரு பக்கம் எளிய மக்களும் எங்களுடைய பயணத்தில் பங்கேற்றனர். இருதரப்பினரிடையே ஒரு பாலம் உருவாகும் வழியை ராகுல் ஏற்படுத்தி கொடுத்தார். மேலும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் நான் அவருடன் பயணம் செய்ததற்காக எனக்கு ‘பாத யாத்ரீ’என்ற பெருமை காங்கிரஸ் கமிட்டியிடம் இருந்து கிடைத்துள்ளது.
இந்திய ஒற்றுமை பயணம் வரும் ஜனவரி 30ம் தேதி காஷ்மீரில் நிறைவடைகிறது. ஏராளமான மக்கள் எங்களுக்கு ஆதரவை நல்கியுள்ளனர். ராகுல் முன்னெடுத்திருக்கும் புரட்சி, இந்திய மக்களிடையே பரவியுள்ளது. நிச்சயம் நாங்கள் மக்களுக்காக நல்ல திட்டங்களை உருவாக்குவோம். பிரிவினைவாத பாஜகவை வீழ்த்துவோம்.
இவ்வாறு ஜோதி பொன்னம்பலம் கூறினார்.