ஆன்லைன் புரோமோஷன், கலர்ஃபுல் பேனர்கள், டிஜிட்டல் விளம்பரங்கள் என சந்தைபடுத்தலுக்கும், வாடிக்கையாளர்களை கவருவதற்கும் இன்றைய இன்டர்நெட் யுகத்தில் பல்வேறு வழிகள் இருந்தும், போட்டிகளைக் கண்டு வணிக உலகிற்குள் கால் வைக்கவே இன்று பலரும் அஞ்சி நடுக்குகிறோம்.. ஆனால் 22 ரூபாயில் 80களில் ஒருவர் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தையே கட்டியுள்ளார்.
ஆன்லைன் புரோமோஷன், கலர்ஃபுல் பேனர்கள், டிஜிட்டல் விளம்பரங்கள் என சந்தைபடுத்தலுக்கும், வாடிக்கையாளர்களை கவருவதற்கும் இன்றைய இன்டர்நெட் யுகத்தில் பல்வேறு வழிகள் இருந்தும், போட்டிகளைக் கண்டு வணிக உலகிற்குள் கால் வைக்கவே இன்று பலரும் அஞ்சி நடுக்குகிறோம்.. ஆனால் 22 ரூபாயில் 80களில் ஒருவர் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தையே கட்டி அமைத்தார் என்றால் வியப்பாக உள்ளது அல்லவா?. ஆம்… வசந்த் அண்ட் கோ இந்த பெயரைக் கேட்டாலே நாம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது ஒன்று மட்டுமே கோர்ட் சூட்டில், சிரித்த முகத்துடன், நாற்காலியில் சுழன்றபடி தோன்றும் வசந்தகுமார் தான்.
அண்ணன் குமரி அனந்தனுக்கு அரசியலில் உதவுவதற்காக சென்னை வந்த வசந்தகுமாருக்கு பரபரப்பான இந்த நகரம் பிடித்துப்போனது. எனவே இங்கேயே ஒருவேலையை தேடிக்கொண்டு அண்ணனுக்கு உதவ முடிவெடுத்தார். முதலில் அவருக்கு கிடைத்தது விஜிபி நிறுவனத்தின் விற்பனை பொருட்களுக்கான தவணையை வீடு, வீடாக சென்று வசூலிக்கும் வேலை 70 ரூபாய்க்கு வேலைக்கு சேர்ந்தார். ஆனால் விஜிபி நிறுவனமோ அவரை மும்பை செல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டது. ஆனால் வசந்தகுமாருக்கோ வந்தாரை வாழ வைக்கும் சென்னையை விட்டு பிரிய மனம் வரவில்லை. அதனால் 300 ரூபாய் சம்பளத்துடன் கிடைத்த மேலாளர் பதவியை ராஜினாமா செய்தார்.
இனி யாரிடமும் வேலை கேட்டு நிற்க கூடாது நாமே சொந்தமாக தொழில் தொடங்க வேண்டுமென முடிவெடுத்தார். கையில் முதலீடு இல்லாமல், எந்த வித ஆதரவும் இன்றி எச்.வசந்தகுமார் இப்படியொரு முடிவெடுக்க காரணம் அவருடைய சின்ன வயது வியாபார ஆசை தான். சிறுவனாக இருக்கும் போதிலிருந்தே வசந்தகுமாருக்கு தொழில் மீதான ஆர்வம் அதிகம், ஊரில் எந்த கோயிலிலாவது திருவிழா என்றால் சர்பத் கடை போட சென்றுவிடுவார், இல்லையெல் பலூன் விற்பாராம். இப்படி சின்ன வயதில் இருந்தே தொழில் மீது இருந்த ஆர்வம் ‘300 ரூபாயோடு நின்றுவிடாதே’ இன்னும் முன்னேறு என அவரை உந்தி தள்ளியது.
விஜிபி நிறுவனத்தின் ஒரு வாடிக்கையாளர் ஒருவர், வசந்தகுமாருக்கு தெற்கு உஸ்மான் சாலையில் உள்ள தனது கடையை, 8,000 ரூபாய்க்கு விற்க முன்வந்தார். நிலுவைத் தொகையை செலுத்த வசந்தகுமாருக்கு ஆறு மாத கால அவகாசம் அளித்தார். விஜிபி நாட்களில் இருந்து வந்த மற்றொரு வாடிக்கையாளரான தேனாம்பேட்டையைச் சேர்ந்த பக்தவச்சலம் என்பவர், அவருக்கு 22 ரூபாய் கொடுத்தார், அதுவே அவரது மூலதனமாக மாறியது. 22 ரூபாய் முதலீட்டில் இருந்து வசந்த் அன் கோ என்ற சாம்ராஜ்யம் எழுத்து நிற்க வசந்தகுமாரின் கடின உழைப்பு, நாணயம் மட்டுமல்ல மாத்தி யோசிக்கும் அறிவும் கைகொடுத்தது.
வசந்தகுமார் விலைக்கு வாங்கியிருந்ததோ ஒரு மளிகை கடையை, அவர் நினைத்திருந்தால் அதே இடத்தில் மளிகை பொருட்களை வாங்கி விற்பனை செய்திருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. நம்மிடம் தான் விஜபி நிறுவனத்திடம் இருந்து பெற்ற தொழில் சூட்சமம், விற்பனை யுக்தி, வாடிக்கையாளர்களுக்கான சேவை ஆகியன இருக்கிறதே, அதனால் வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் கடையை ஆரம்பிக்கலாம் என முடிவெடுத்தார். ‘வசந்த் ஏஜென்ஸீஸ் ஸ்டீல் அண்ட் வுட் பர்னிச்சர்ஸ்’ என்ற பெயரில் கடையை திறந்தார். ஆரம்பத்தில் அந்த கடைகளில் வசந்தகுமார் விற்பனை செய்தது என்னவோ, 25 ரூபாய் மதிப்புள்ள மடிப்பு நாற்காலிகளை தான். ஆனால் அதற்கு அவர் பயன்படுத்திய மார்க்கெட்டிங் டெக்னிங் தான் வேற லெவலே.
அதாவது தியாகராய நகர் பகுதியில் பேருந்திற்காக காத்திருக்கும் முதியவர்களுக்கு தனது கடையில் இருந்த மடக்கும் ஷேரைப் போட்டு அமரவைத்து, குடிநீர் கொடுத்து உபசரிப்பாராம். அந்த முதியவர்கள் மனம் குளிர்ந்து இந்த கடையைப் பற்றி உறவினர்கள், நண்பர்களிடம் புகழ்பாடுவார்களாம். அதன் மூலமாகவும் வசந்தகுமாருக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் கிடைத்துள்ளனர். இதை ஆங்கிலத்தில் ‘word of mouth’ என்று சொல்லுவார்கள். அந்த டெக்னிக்கை 80களிலேயே படு லாவகமாக கையாண்டு சாதூரியக்காரர் வசந்தகுமார் தான்.
அடுத்ததாக வீடு, வீடாக சென்று மக்களிடம் பொருட்களை விற்று, அதற்கான தவணை தொகையை வசூலிக்க ஆரம்பித்தார். குறிப்பிட்ட தொகையை அட்வான்ஸாக செலுத்தினாலே வீட்டிற்கு தேவையான பொருட்கள் கைக்கு வந்துவிடும் என்ற வசந்தகுமாரின் யுக்தி நடுத்தர குடும்பத்தினரை வெகுவாக கவர்ந்தது. இதனால் வசந்தகுமாரின் இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
இதனால் கொஞ்சம் கொஞ்சமாக தனது கடையை விரிவுப் படுத்தினார். டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின் விற்பனை என தனது தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லத் தொடங்கினார் வசந்தகுமார். இந்த முறை நடுத்தர மக்களும், வருவாய் குறைவானவர்களும் கூட ஆடம்பர வீட்டு உபயோக பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் தள்ளுபடி திட்டத்தை தவணை முறையில் ஆரம்பித்தார். இதற்கும் மக்கள் வெகுவாக ஆதரவு கொடுத்தனர்.
எல்லா வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் கடைக்காரர்களும் மக்களை மட்டுமே நம்பிக்கொண்டிருந்த நேரத்தில் வசந்தகுமார் அதிலும் தனது மாற்று சிந்தனையை செலுத்தினார். தனது வழக்கமான விற்பனையைத் தவிர, நிறுவனங்களுக்கான விற்பனையையும் அவர் தேர்ந்தெடுத்தார். ஒரு பெரிய நிறுவனத்தில் வேலைபார்க்கும் பல ஆயிரம் ஊழியர்களை ஒரே நேரத்தில் தன் வாடிக்கையாளர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணினார். அசோக் லேலண்ட் நிறுவனத்தை அணுகி தொலைக்காட்சி பெட்டிகளுக்கு ஆர்டர் கேட்டார். எண்ணூரில் இருக்கும் அசோக் லேலாண்ட் நிறுவனத்திற்கு தி.நகரிலிருந்து இரண்டரை மணி நேரம் சைக்கிள் மிதித்து செல்வார். பலமுறை அவர் சென்று அணுகிய போதும் அசோல் லேலாண்ட் நிறுவனம் அவரை நிராகரிக்கவே செய்தது. ஆனால் அவரது அணுகுமுறை அவருக்கு 960 தொலைக்காட்சி பெட்டிகளுக்கான ஆர்டரை பெற்றுத்தந்தது. இன்று 960 என்பது சிறிய ஆர்டராகவே இருந்தாலும், அப்போது இது மிகப் பெரிய ஆர்டராக பார்க்கப்பட்டது, இந்திய அளவில் பெரும் சாதனையாகவே மாறியிருந்தது.
வசந்த் அண்ட் கோ மக்களிடம் அதிக வரவேற்பைப் பெற மற்றுமொரு காரணம், பொருட்களை விற்றவுடன், வாடிக்கையாளருடன் தனது உறவைத் துண்டித்து விடாத அணுகுமுறை தான். இதற்கென தனி வாடிக்கையாளர் சேவை மையத்தையும், நூற்றுக்கும் மேற்பட்ட தொலைபேசிகளை இணைப்புகளை வசந்தகுமார் அமைத்திருந்தார். வாடிக்கையாளர்கள் எந்த குறை சொன்னாலும், அதை உடனடியாகச் சரிசெய்து தரும் வேலையைக் கச்சிதமாகச் செய்து தந்ததால், ஒரு முறை வசந்த் அண்ட் கோவில் பொருள்களை வாங்கிய வாடிக்கையாளர்கள் அடுத்தடுத்து வாங்கி, நிரந்தர வாடிக்கையாளர்களாக மாறினார்கள்.
நகரங்களில் திரும்பி பக்கமெல்லாம் வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் அதிகமிருந்தன. எனவே வசந்தகுமாரின் அடுத்த டார்கெட்டாக கிராமங்கள் மாறியது. கிராமப்புறங்களே வசந்த் அண்ட் கோவின் மிகப்பெரிய மார்க்கெட்டாக மாற்றினார், அதனால் தான் இன்றளவும் அவர்களது விற்பனையில் 60 சதவீதம் ஊரகப் பகுதியில் தான் நடைபெறுகிறது.
யானைக்கும் அடி சறுக்கும் என்பது பழமொழி அதேபோல் தான் வசந்தகுமாருக்கும் தனது தொழில் சறுக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து தன்னுடைய புதிய யுக்திகளால் வெற்றி பெற்று வந்த வசந்தகுமார், மத்த பிரபல நிறுவனங்களிடம் இருந்து வாங்கி விற்ற பொருட்களைத் தவிர, மிக்ஸி, பேன் உள்ளிட்ட சில பொருட்களை சொந்தமாக தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கினார் வசந்தகுமார். ஆனால் பிராண்டுகளை நம்பிய மக்களால் வசந்தகுமாரின் தயாரிப்புகளுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் தொழிலில் சிறு சறுக்கலைச் சந்தித்தார். ஆனால் உடனடியாக உற்பத்தியை கைவிட்டார். அப்போதும் கூட புன்னகை மாறாத முகத்துடன் வசந்தகுமார் சொன்னது இதை தான் “வாடிக்கையாளர்கள் என்னை உற்பத்தியாளராக பார்க்கவில்லை. எனவே அவர்களுக்கு பிடிக்காத விஷயத்தை கைவிட்டு விட்டு வெற்றியை நோக்கி தொடர்ந்து முன்னேறுவேன்” என்றாராம். அப்படியானால் தமிழகத்தின் கடைக்கோடியில் பிறந்த வசந்தகுமாரிடம் எத்தனை அளவிற்கு தன்னம்பிக்கையும், அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் இருக்கும் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. சின்ன சின்ன தோல்விகளுக்கு கூட துவண்டு போகும் இன்றைய இளம் தலைமுறையினர் வசந்தகுமாரின் மாற்றி யோசிக்கும் டெக்னிக்கை கையில் எடுத்தால் வெற்றி நிச்சயம்…