கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது தி.மு.க வில் ஒருமித்த கருத்துடைய காட்சிகள் இல்லை என்று பேசினார்.
தூத்துக்குடிக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) வருகை தரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசு ஆஸ்பத்திரியில் ரூ.23 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புற்றுநோய் சிகிச்சை மையத்தை திறந்து வைக்கிறார். புதுடெல்லியில் பிரதமர் மோடி கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரசார சி.டி.யை வெளியிடும்போது, தூத்துக்குடியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு சி.டி.யை வெளியிடுகிறார்.
தி.மு.க. கூட்டணி விரைவில் உடைவது மட்டுமின்றி சிதறி விடும். அங்கு ஒருமித்த கருத்துடைய கட்சிகள் இல்லை. கூட்டணி தர்மத்தை மதித்து கடைபிடிக்கும் ஒரே கட்சி அ.தி.மு.க.தான். அதனால் தான் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனுக்கும் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் பதவியை அ.தி.மு.க. வழங்கியது. தி.மு.க. கூட்டணியில் இருக்கும் பல கட்சிகள் விரைவில் அ.தி.மு.க. கூட்டணிக்கு வர தயாராக உள்ளன. அது நிச்சயமாக நடக்கும்.
முன்பு அ.தி.மு.க.வுடன் பிற கட்சிகள் கூட்டணி அமைக்கும்போது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாதான் முதல்-அமைச்சர் வேட்பாளர்களாக முன்னிறுத்தப்பட்டனர். அதே போன்றுதான் தற்போதும் அ.தி.மு.க.வின் முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தப்பட்டுள்ளார். தமிழகத்தில் அ.தி.மு.க.தான் கூட்டணிக்கு தலைமை தாங்குகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.