கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு தனது பெண்ணை கடத்தி திருமணம் செய்துள்ளார் என்று பெண்ணின் தந்தை பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. திருமணம்…
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு இன்று காலை திடீரென 19 வயது இளம்பெண்ணை திருமணம் செய்துள்ளார். தன்னை விட 20 வயது குறைவான பெண்ணை அவர் திருமணம் செய்திருப்பது பல்வேறு தரப்பினர் மத்தியிலும் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த திருமணத்திற்கு பெண்ணின் குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்றும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
பெண்ணின் தந்தை வேதனை
எம்,எல்.ஏ. பிரபு திருமணம் செய்துள்ள பெண்ணின் தந்தையும், தியாகதுருகம் மலையம்மன் கோயிலில் குருக்களாகப் பணிபுரிந்துவருபவரான சுவாமிநாதன் இன்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், அவர் பேசியிருப்பதாவது:-
கடத்தி திருமணம்
வணக்கம். நான் சுவாமிநாதன். தியாகதுருகம் மலையம்மன் கோயிலில் குருக்களாகப் பணியாற்றுகிறேன். என் மகள் திருச்செங்கோட்டில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி.ஏ இங்லீஷ் இரண்டாமாண்டு படிச்சிக்கிட்டு இருக்க. என் மகளை ஆசைவார்த்தைகள் கூறி, அவரை திசைதிருப்பி கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு 1-ம் தேதி மாலை 4 மணியளவில் கடத்திவிட்டார்.
மீட்டுத்தர வேண்டும். ரொம்ப மனஉளைச்சலா இருக்கு. வேதனையாக இருக்கு. இது தொடர்பாக காவல்துறையிலோ, மாவட்ட ஆட்சியரிடமோ புகார் கொடுக்கச் சென்றால், `நான் ஒரு எம்.எல்.ஏ. எனக்கு பொருளாதார பலமும், அதிகார பலமும் இருக்கு. என்னை ஒன்றும் செய்ய முடியாது என்கிறார். என்னைக் கொலை செய்துவிடுவேன் என்றும், எனது குடும்பத்தையே காலி செய்துவிடுவேன் என்றும், இதையும் மீறி நீ புகார் அளிக்கச் சென்றால் உன் பொண்ணையே கொலை செய்துவிடுவேன’ என்றும் ஆள்வைத்து மிரட்டுகிறார். எனது மகள் சிறு வயதுப் பெண். அவரை ஆசைவார்த்தைகள் கூறி அழைத்துச் சென்றுவிட்டார். தயவு செய்து அவரை மீட்டுத் தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
கொலை மிரட்டல்
நான் தனி நபரா இருக்கேன். என்னால் புகார் குடுக்க முடியலை. காவல் நிலையத்துலயும் போய் புகார் கொடுக்க முடியலை. மிரட்டல்கள், கொலை மிரட்டல்கள் விடுகிறார்கள்.. அ.ம.மு.க தெற்கு மாவட்டச் செயலாளர் கோமுகி மணியன் வீட்டுக்கே வந்து மிரட்டுகிறார்.
திருநாவலூர் கூட்டுறவு சங்கத் தலைவர் குமாரவேல், என்னைக் கொலை செய்துவிடுவேன் என்றும், என்னிடம் ஆள்கள் இருக்கிறார்கள் என்றும் மிரட்டுகிறார். எனக்கு பயமாக இருக்கிறது. வீட்டில் இருப்பதற்கும், தனியா கோயிலுக்குப் போவதற்கும் பயமாக இருக்கிறது. என் மகளை எப்படியாது மீட்டுத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் வேதனையுடன் பேசியுள்ளார்.
முதல்வர் தலையிடுவாரா?
ஒரு எம்.எல்.ஏ.வே இவ்வாறு நடந்து கொண்ட சம்பவம் கட்சியிலும், அப்பகுதியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் முதல்வரே நேரடியாக தலையிட்டு சுமூக தீர்வு காண வேண்டும் என்று பல தரப்பினரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.