2020ம் ஆண்டுகான பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்;
மறைந்த பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் உள்ளிட்டோருக்கு நாளை 2021ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்படவுள்ளது.
டெல்லி,
நாட்டின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷன் , பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய பெயர்களில் மூன்று பிரிவாக வழங்கப்படுகிறது. கலை , சமூகப்பணி , பொது விவகாரங்கள் , அறிவியல் மற்றும் பொறியியல் , வர்த்தகம் மற்றும் தொழில் , இலக்கியம் மற்றும் கல்வி , மருத்துவம் , விளையாட்டு , குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது . மிக அரிய மற்றும் தலைசிறந்த சேவையாற்றியவர்களுக்கு ‘ பத்ம விபூஷன் ‘ விருதும் , மிக உயரிய வகையில் தலைசிறந்த சேவையாற்றியவர்களுக்கு ‘ பத்ம பூஷன் ‘ விருதும் , எந்தத் துறையிலும் தலைசிறந்த பணியாற்றியவர்களுக்கு ‘ பத்மஸ்ரீ ‘ விருதும் வழங்கப்பட்டு வருகிறது .
2020ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்ட போதிலும் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக வழங்கப்படவில்லை. அதற்கு பின்னர் ஏற்பட்ட கொரோனா இரண்டாம் அலை அதனால் ஏற்பட்ட பாதிப்பு என 2021ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் ஏப்ரல் மாதத்தில் வழங்காமல் காலதாமதமாக நாளை வழங்கப்பட உள்ளது. டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் அமைந்திருக்கும் ‘தர்பார்’ அரங்கில் 2020ம் ஆண்டுக்கான பத்மவிருதுகள் வழங்கும் விழா இன்றைய தினம் நடைபெற்றது.
இரண்டுநாட்கள் நடைபெறக்கூடிய நிகழ்ச்சியில் இன்றைய தினம் 2020ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளும், நாளையதினம் 2021ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளும் வழங்கப்பட உள்ளது. 2020ம் ஆண்டுக்கான பத்ம விருது வழங்கும் இன்றைய நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
2020ஆம் ஆண்டு மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்ட பத்ம விருதுகள் மொத்தமாக 141 பேருக்கு வழங்கப்பட்டது. அதில் 7பேர் பத்மவிபூஷன், 16 பத்ம பூஷன் மற்றும் 118 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டது. இவ்விருதுகளில் 33 பேர் பெண்களும், 16 பேர் வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் மற்றும் 12 பேர் உயிரிழந்ததற்கு பின்னதாக விருது அறிவிக்கப்பட்டவர் ஆவர். முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு அறிவிக்கப்பட்ட பத்ம விபூஷன் விருது அவருடைய மகள் பன்சுரி சுவராஜ் குடியரசுத் தலைவரிடம் இருந்து பெற்றுக் கொண்டார். இதேபோல, ஒலிம்பிக் பேட்மிட்டன் விளையாட்டு வீராங்கனை பிவி சிந்துவுக்கு பத்ம பூஷன் விருதும், 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான ஹாக்கி அணியை வழிநடத்திய அணியின் கேப்டன் ராணி ராம்பாலுக்கு பத்மஸ்ரீ விருதும், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்க்கு பத்ம ஸ்ரீ விருதும் வழங்கி கெரவிக்கப்பட்டது.
நாளைய தினம் குடியரசுதலைவர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில் 2021ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் தமிழகத்திலிருந்து மறைந்த பிரபல பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியனுக்கு கலைக்கான பத்ம விபூஷன் விருதும், அதே கலைக்கான பிரிவில் சுப்பு ஆறுமுகத்திற்கு பத்ம ஸ்ரீ விருதும் வழங்கப்படவுள்ளது. 2000-2017 வரை இந்திய கூடைப்பந்து அணியின் பெண்கள் பிரிவின் கேப்டனாக இருந்த அனிதா பால்துரைக்கு விளையாட்டுக்கான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.