சசிகலாவுக்கு எதிராக குற்றம்சாட்டிய ஐபிஎஸ் அதிகாரி ரூபாவை உள் துறைச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியுள்ளது கர்நாடக அரசு
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதனால் முதல்வராக பதவியேற்க இருந்த சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடைக்கப்பட்டனர்.
அதே ஆண்டு ஜூன் மாதம் கர்நாடகா சிறைத்துறை டிஐஜி ரூபா பரப்பன அக்ரஹார சிறையில் அதிரடி ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வுக்கு பிறகு, சிறையில் தண்டனைக் கைதிகளாக உள்ள சசிகலா, இளவரசி ஆகிய இருவருக்கும் பரப்பன அக்ரஹார சிறையில் பல சலுகைகள் வழங்கப்பட்டதாக ஊடகங்களில் ரூபா குற்றம்சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.
தண்டனைக் கைதியைப் போலில்லாமல் அவர்களுக்கு என்று தனி அறை, சமையல் அறை, அவர்களைப் பார்க்க வரும் பார்வையாளர்களைச் சந்திக்க தனி அறை என்று சிறை அதிகாரிகள் செய்துகொடுத்துள்ளனர். இதை கர்நாடகா சிறைத்துறை டிஜிபி சத்யநாராயண ராவ் லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதித்துள்ளார் எனவும் குற்றம்சாட்டினார். இதுபற்றி ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய் குமார் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அதன்பிறகு ரூபா, போக்குவரத்து காவல் பிரிவுக்கும், ஊர்காவல் படை ஐஜியாகவும் மாற்றம்செய்யப்பட்டார்.
இதனிடையே கர்நாடகாவின் முதல் பெண் உள் துறைச் செயலாளராக ரூபாவை கடந்த ஆகஸ்ட் மாதம் நியமனம் செய்தது அம்மாநில அரசு. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பெங்களூரு மாநகருக்கான பாதுகாப்பு திட்டத்திற்கான டெண்டர் விவகாரம் தொடர்பாக, ரூபாவுக்கும் பெங்களூரு கூடுதல் கமிஷனரும் ஐஜியுமான ஹேமந்த் நிம்பல்கருக்கும் மோதல் வெடித்தது.இந்த டெண்டர் குழுவின் தலைவராக இருக்கும் நிம்பல்கர், ஒரு தரப்புக்கு டெண்டர் கிடைக்கும் வகையில் விதிகளை மீறி செயல்படுவதாக அவர் மீது ரூபா குற்றம்சாட்ட, அதிகாரமே இல்லாமல் இதில் தலையிடுவதாகக் பதிலடி கொடுத்தார் நிம்பல்கர்.
read more: 100 நாள் வேலைக்கு 3 மாதங்களாக பணம் தராதது ஏன்? மத்திய அரசுக்கு திமுக கடிதம்!
சர்ச்சையை அடுத்து உள் துறைச் செயலாளரான ஐ.ஜி ரூபா, கர்நாடக மாநில கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குனராக மாற்றப்பட்டார். கூடுதல் கமிஷனராக (நிர்வாகப் பிரிவு) இருந்த ஐ.ஜி நிம்பல்கர், பெங்களூரு உள் பாதுகாப்பு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டார். சசிகலா விடுதலைக்கு எதிராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரூபா வேறு துறைக்கு மாற்றப்பட்டதால், சசிகலா ஆதரவாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.