ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு மற்றும் கர்சன் எஸ்டேட்டுகளின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. வழக்கு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு மற்றும் கர்சன் எஸ்டேட்டுகளின் வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
வரி பாக்கி நிலுவையில் இருப்பதாகவும், வருமானத்துக்கு குறைவாக கணக்கு காட்டியதாலும் 2 எஸ்டேட்களின் வங்கிக் கணக்கை முடக்கி வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோத்தகிரி ஈளாடாவில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் உள்ள எஸ்டேட்களின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
மேலும், எஸ்டேட்களின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால் எஸ்டேட்டில் பணிபுரியும் 700க்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாமல் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.