ஆறுமுகசாமி விசாரணைக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு கோரி அப்பல்லோ நிர்வாகம் சார்பில் தொடரப்பட்ட மனு மீதான விசாரணை நாளை உச்ச நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
டெல்லி,
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் முன்பு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து தங்கள் தரப்புக்கு விலக்கு அளிக்க வேண்டும் என கோரி அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதேபோல ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரிய தமிழக அரசின் இடைக்கால மனு தனியாக தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கடந்த ஜூலை 26ஆம் தேதி இந்த இரண்டு மனுக்களும் ஒன்றாக இணைத்து விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர்.
அதன்பிறகு விசாரணை எதுவும் நடைபெறாமல் இருந்த நிலையில் செப்டம்பர் 16ம் தேதி பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு வந்த போது நீதிமன்ற வழக்கின் விசாரணை தாமதமாவதால் ஆணையத்தின் விசாரணையும் தாமதமாகிறது என ஆறுமுகசாமி ஆணைய தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தனர்.
இதனையடுத்து, செப்டம்பர் 23 அன்று கட்டாயம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் நீதிபதிகள் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர். ஆனால், அன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டும் விசாரணை எடுத்து கொள்ளவில்லை.
இந்நிலையில் நாளை இவ்வழக்கின் மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அப்துல் நசீர் கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளது.