ஊரடங்கில் இ-பாஸ் நடைமுறை, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு முடக்கம் ரத்து போன்ற பல்வேறு தளர்வுகள் வழங்கி முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கொரோனா பரவல், தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு, தளர்வுகள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்கள் உடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.
அதைதொடர்ந்து தற்போது ஊரடங்கு விதிமுறைகளில் பல்வேறு தளர்வுகள் அடங்கிய புதிய அறிவிப்பு வெளிப்பட்டுள்ளது.
வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் தளர்வுகளின் விவரங்கள் பின்வருமாறு:
- தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கு இ- பாஸ் அவசியமில்லை
- மாவட்டங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் போக்குவரத்திற்கு அனுமதி
- வணிக வளாகங்கள், பெரிய ஷோரூம்கள், பெரிய கடைகள் 100% ஊழியர்களுடன் செயல்பட அனுமதி
- சென்னை பெருநகரில் நிலையான வழிமுறைகளுடன் மெட்ரோ ரயில் சேவை செப்.7 முதல் தொடங்குகிறது.
- அனைத்து வழிபாட்டுத் தளங்களிலும் பக்தர்கள் கட்டுப்பாடுகளுடன் தரிசனம் செய்ய அனுமதி
- தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளையும் இரவு 8 மணி வரை திறக்க அனுமதி
- சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தொழிற்சாலைகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் இயங்க அனுமதி (ஐடி பிரிவில் முடிந்தவரை வீட்டில் இருந்து பணியாற்ற ஊழியர்களை அனுமதிக்கலாம் )
- உடற்பயிற்சி, விளையாட்டு மைதானங்கள் (பார்வையாளர்களுக்கு அனுமதி மறுப்பு) , பூங்காக்கள் திறக்க அனுமதி
- வங்கிகள், அதை சார்ந்த அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள் 100% ஊழியர்களுடன் இயங்கலாம்
- திரைப்பட படப்பிடிப்பு பணிகள் 75 நபர்கள் மட்டும் கொண்ட குழுவுடன், நெறிமுறைகளுடன் நடத்த அனுமதி
- அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டும் ரயில்கள் இயங்க அனுமதி
- பள்ளி/கல்லூரி/ஆராய்ச்சி நிறுவனங்கள் போன்றவை இயங்குவதற்கான தடை நீட்டிப்பு
- திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், கடற்கரைகள், கூட்ட அரங்குகள், அருங்காட்சியகங்கள், கடற்கரைகள், சுற்றுலாத்தலங்கள் போன்றவை இயங்கவும், மக்கள் கூடவும் தடை நீட்டிப்பு
- புறநகர் ரயில் போக்குவரத்திற்கான தடை நீட்டிப்பு
- மதம், அரசியல், கலாச்சார, சமுதாய மற்றும் கல்வி விழாக்கள் போன்றவற்றை நடத்துவதற்காக தடை நீட்டிப்பு