கொரோனா நோய் காரணமாக கடந்த ஐந்து மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, மெட்ரோ ரெயில் சேவை நாடு முழுவதும் இன்று முதல் தொடங்கியது.
வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையிலான வழித்தடத்தில் இன்று காலை 7 மணிக்கு மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியது. அரசு குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இரவு 8 மணி வரை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைத்த தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், விமான நிலையம் ரெயில் நிலையத்தில் இருந்து வண்ணாரப்பேட்டை ரெயில் நிலையம் வரை பயணிகளுடன் சக பயணியாக பயணம் செய்தார். அவருடன் மெட்ரோ ரெயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் மற்றும் மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் பயணம் செய்தனர்.
செப். 9 முதல் சென்ட்ரலிருந்து கோயம்பேடு வழியே ஏர்போர்ட்டுக்கு பச்சை நிற வழித்தடத்தில் ரெயில் இயக்கப்படுகிறது.குறிப்பாக பயண அட்டைகள் (‘ஸ்மார்ட் கார்டு’) பெறுதல் மற்றும் ரீசார்ஜ் செய்வது மற்றும் செல்போன் உதவியுடன் மெட்ரோ ரெயில் செயலியில் ‘கியூ.ஆர்.’ குறியீட்டு முறையில் டிக்கெட் எடுக்கும் முறை அதிகம் ஊக்குவிக்கப்படும். தவிர்க்க முடியாத காரணத்தால் சுத்தம் செய்த டோக்கன் டிக்கெட் வழங்கப்படுகிறது. அதே போல் கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய காற்று செல்லும் பாதைகளில் புறஊதா கதிர்கள் மூலம் கிருமிகள் அழிக்கப்படுகின்றன.
கூட்ட நெரிசலை தவிர்ப்பது, சமூக இடைவெளியை பின்பற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு ரெயில் நிலையங்களிலும் 5 முதல் 10 பணியாளர்கள் வரை கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அலுவலக நேரமான காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலான நேரத்தில் 5 நிமிட இடைவெளியில் ஒரு ரெயிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியில் ஒரு ரெயிலும் இயக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.