முதலமைச்சர் இடத்தில் எடப்பாடி பழனிசாமியை தவிர, வேறு யாரையும் வைத்துப் பார்க்க மக்கள் விரும்பவில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவித்துள்ளார்.
கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது, இன்று உள்ள முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரிடம் பாடம் பயின்றவர்கள். தேர்தல் அறிக்கையில் ஜெயலலிதா அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார்.
இன்றைக்கு அவரை முதலமைச்சராக, தலைவராகத்தான் மக்கள் பார்க்கிறார்கள். அந்த இடத்தில் வேறு யாரையும் வைத்துப் பார்க்க மக்கள் தயாராக இல்லை. எனவே வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும்.
திரைப்படத் துறையைப் பொருத்தவரை பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. தற்போது திரையரங்குகளை திறப்பதற்கு மத்திய அரசு வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக முதலமைச்சர், துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்து வருகிறார். விரைவில் முதலமைச்சர் நல்ல முடிவை அறிவிப்பார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க. ஆட்சிதான் பாதுகாப்பாக இருந்து வருகிறது என அவர் கூறினார்.