
தாய்லாந்தில் உள்ள குரங்கு ஒன்று, துரித உணவுகளை அதிகமாக உட்கொண்ட காரணத்தால், அதன் எடை 20 கிலோவுக்கு அதிகமாக கூடி குண்டாகிவிட்டது. இந்த குரங்கின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
தாய்லாந்து நாட்டின் பாங்காங்கின் மின் பூர் மாவட்டத்தில் உள்ள மார்க்கெட் ஒன்றில் குண்டு குரங்கு ஒன்று வளர்க்கப்படுகிறது. அதற்கு ‘காட்ஸில்லா’ என பெயரிட்டு அதன் உரிமையாளர் வளர்த்து வருகிறார்.
மார்க்கெட்டுக்கு வருபவர்கள் துரித வரை உணவுகளை (ஜங்க் ஃபுட்கள்) அதிகம் தர, அதனை உட்கொண்ட காட்ஸில்லா, நாளுக்கு நாள் குண்டாகி கொண்டே வருகிறது. கிப்பன்கள், மாகாக்ஸ், லாங்கூர்ஸ் மற்றும் லோரிஸ் போன்ற குரங்கு இனங்கள் பலவும், தாய்லாந்தின் பல பகுதிகளிலும் சுற்றித் திரிந்து வரும் நிலையில், காட்ஸிலாவுக்கு வந்த நிலைமை தான் பரிதாபம்.
மக்காக் இன குரங்குகள் பொதுவாக 9 கிலோ எடையில் இருக்கும். ஆனால் 3 வயது நிரம்பிய காட்ஸிலாவின் எடை தற்போது 20 கிலோவுக்கும் அதிகமானதாக இருக்கிறது.
இதற்கு காரணம், வழிப்போக்கர்கள் தரும் துரித உணவுகளை அதிகம் உண்பதே. மனோப் என்ற கடைக்காரர் தற்போது காட்ஸில்லாவை வளர்த்து வருகிறார். ‘அங்கிள் ஃபேட்டி’ என்ற குரங்கு 25 கிலோ வரை குண்டாகி சமீபத்தில் இறந்து போன நிலையில், இதன் நிலையை கண்டு விலங்குகள் நல ஆர்வலர்கள் சோகமடைந்திருக்கின்றனர்.




