மேலும் நிறுத்தி வைத்தால் கடனை திருப்பி செலுத்தும் ஆர்வத்தை குறைத்துவிடும் : ஆர்.பி.ஐ
ரிசர்வ் வங்கி அறிவித்த 6 மாத கடன் தவணை சலுகை இன்றுடன் முடிகிறது. இதனால் செப்டம்பர் முதல் வாரத்தில் எல்லோரும் இஎம்ஐ கட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் வேலைக்கு செல்லாத மக்கள் எப்படி இஎம்ஐ கட்டுவது என்று தெரியாமல் தவிக்கும் நிலை உள்ளது. கடன் தவணை சலுகை மேலும் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கால் மக்கள் வருவாய் இழப்பை சந்தித்த காரணத்தால்,கடன் தவணைகளை வங்கிகள் 3 மாதங்களுக்கு வசூலிக்க வேண்டாம் என ரிசர்வ் வங்கி ஆரம்பத்தில் கேட்டுக் கொண்டது. இந்த சலுகை மே 31 வரை முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில் பின்னர் மீண்டும் 3 மாதங்களுக்கு நீட்டித்து ஆகஸட் 31 வரை கொண்டுவரப்பட்டது.
இதன்படி. தனிநபர் கடன்கள், கல்விக் கடன்கள், வீட்டுக் கடன்கள், விவசாய கடன்கள், வாகனக் கடன்கள் போன்றவற்றிற்கு மக்கள் இஎம்ஐ கட்டாமல் மொரோட்டோரியம் என்று சொல்லப்படும் கடன் தவணை சலுகையை பயன்படுத்தி வந்தனர்.
தற்போது இ-பாஸ் ரத்து, ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு ரத்து போன்ற பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொருளதாரத்தை மீட்டுக்க பல்வேறு பணிகளுக்கும் அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில் இந்தச் சலுகை மேலும் நீட்டிக்கப்படாது என்று தெரிய வருகிறது. பெரும்பாலான வங்கிகள் மாதத்தின் முதல் வாரத்தில் இஎம்ஐ பணத்தை ஆட்டோ டெபிட் முறையில் வசூலிக்கும். ஆனால் பணம் இல்லாமல் இருக்கும் மக்களுக்கு கூடுதல் அபாரதம் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடன் தவணை சலுகையை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் , பொதுமக்கள் ரிசர்வ் வங்கிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சலுகை மீண்டும் நீட்டிக்கப்படுமா என தொழில் நிறுவனங்கள், பொதுமக்கள் எதிர்ப்பார்க்கிறார்கள். கடன் தவணை சலுகையை நீட்டிக்கக்கூடாது என வங்கிகள் தரப்பில் வேண்டுகோள் விடுத்தன.
மேலும் நிறுத்தி வைத்தால் கடனை திருப்பி செலுத்தும் ஆர்வத்தை குறைத்துவிடும் என்று ரிசர்வ் வங்கி கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.