தூத்துக்குடியில் கடையில் வாங்கிய சிக்கன் கிரேவி சாப்பிட்டுவிட்டு குளிர்பானம் அருந்திய தாயும் மகளும் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவர்கள் சாப்பிட்ட உணவில் விஷம் கலக்கப்பட்டிருந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தங்கப்பன் நகரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் இளங்கோவன் மனைவி கற்பகம். கற்பகமும் அவரது மகள் தர்ஷினியும் கடந்த 12ஆம் தேதி அருகே உள்ள ஹோட்டலில் சிக்கன் கிரேவி வாங்கி வந்துள்ளனர். வீட்டில் தயாரித்து வைத்திருந்த சாதத்துடன் சேர்த்து சிக்கன் கிரேவி சாப்பிட்ட இருவரும் அதன் பிறகு வயிறு எரிச்சல் இருந்ததால் பக்கத்துக் கடையில் குளிர்பானம் வாங்கி அருந்தியதாகக் கூறப்படுகிறது. குளிர்பானம் குடித்த சிறிது நேரத்திலேயே தாய் கற்பகம், மகள் தர்ஷினி ஆகிய இருவருக்கும் வாந்தி மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
இருவரும் அக்கம்பக்கத்தினரால் உடனடியாக மருத்துவர்களால் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், இருவரும் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பான புகார்கள் எழுந்த நிலையில், தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறை மற்றும் மருந்து நிர்வாகத்துறை அலுவலர்கள் சம்பந்தப்பட்ட ஹோட்டல் மற்றும் குளிர்பான கடையில் ஆய்வு நடத்தினர். ஆனால் இந்த சம்பவத்தில், உணவின் குறைபாடு நேரடி காரணம் இல்லை. பூச்சிக்கொல்லி மருந்து கலந்திருக்க முகாந்திரம் உள்ளது என ஏற்கனவே மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் மாரியப்பன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த சம்பவத்தில் உணவில் விஷம் கலந்திருப்பது தற்போது செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து கற்பகம் பயன்படுத்திவந்த செல்ஃபோனை போலீசார் ஆய்வு செய்ததில், பக்கத்து வீட்டில் வசித்துவந்த வீரப்பெருமாள் என்பவர் தன்னுடன் முறையற்ற உறவில் வாழ கற்பகத்திற்கு தொல்லை கொடுத்துள்ளார். வாழ வரவில்லை என்றால் சேர்ந்து எடுத்துக்கொண்ட நிர்வாண மற்றும் ஆபாச புகைப்படத்தை வெளியிட்டுவிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். இந்த சம்பவத்தில் வீரப்பெருமாளை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.