தேர்தல் வெற்றிக்குப் பிறகுதான் முதல்வர் வேட்பாளரை முடிவு செய்வோம் என பாஜக தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். ஆனால், இதுவரை பாஜக அவரை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளவில்லை. எடப்பாடி பழனிசாமி அதிமுக என்ற கட்சியின் முதல்வர் வேட்பாளர் , தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் அல்ல என்று தமிழக பாஜக தலைவர் முருகன் கூறினார்.
பாஜக அதிமுக கூட்டணி தொடரும் என்று அண்மையில் அமித் ஷா முன்னிலையில் அரசு விழாவில் அதிமுக அறிவித்தபோதும் அதுபற்றி அமித் ஷா எதுவுமே கூறவில்லை.டிசம்பர் 25 ஆம் தேதி சென்னை வந்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம், முதல்வர் வேட்பாளர் பற்றி கேட்டபோது அதுபற்றி கருத்து கூற மறுத்துவிட்டார். ஆனால், முதல்வர் வேட்பாளரை ஏற்கும் கட்சிகளுடன் தான் கூட்டணி அமையும் என அதிமுக திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.
இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜகவின் தேசிய பொதுச் செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான சி.டி.ரவி, தேர்தல் வெற்றிக்குப் பின் முதல்வர் வேட்பாளரை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுதான் கூடி முடிவெடுக்கும் என்று தெரிவித்தார்.
read more: ரஜினி மன உளைச்சல்ல இருக்காரு, யாரும் விமர்சிக்காதீங்க: அர்ஜுன மூர்த்தி
அதனைத் தொடர்ந்து தனது ட்விட்டரில், “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழ்நாட்டில் அதிமுகதான் மிகப்பெரிய கட்சி. மிகப்பெரிய கூட்டணி கட்சியில் இருந்துதான் முத்ல்வர் இருப்பார் என்பது இயல்பானது” என்றார். தற்போது, முதல்வர் பழனிசாமி நம்முடைய முதல்வராக இருக்கிறார். தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒருங்கிணைப்புக் குழு முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும் எனவும் அவர் கூறினார்.