நீட் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு குறிப்பாக தமிழ் வழிக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஏ.கே.ராஜன் குழு அளித்த அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வந்தது. இதனால் தமிழகத்தில் நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவிடம் பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினர் கருத்து மற்றும் தங்களின் பரிந்துரை ஆகியவற்றை அறிக்கையாக தயார் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர். இந்நிலையில், நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் குழு தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பித்த அறிக்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், தமிழகத்தில் நீட் தேர்வு தொடர்ந்து நடந்தால், சுகாதார கட்டமைப்பு, கல்வி பாதிக்கப்படும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான மருத்துவர்கள் இருக்க மாட்டார்கள். அரசு மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்கள் இருக்கமாட்டார்கள். இந்த நீட் தேர்வு கோச்சிங் செண்டர்கள் வளர மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் நீட் தேர்வு மட்டுமல்ல எந்தவித பொது நுழைவு தேர்வும் நியாயமானதாக இருக்காது. நீட் தேர்வுக்கு பின் மருத்துவப் படிப்பில் சேர்ந்த ஆங்கில வழி மாணவர்களின் சதவீதம் 56.02% முதல் 69.53% ஆக உயர்ந்தது. ஆனால் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களின் சதவீதம் 14.44% முதல் 1.7% என குறைந்துள்ளது என நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து நீட் தேர்வை ரத்து செய்ய தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக தொடங்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய தனிச்சட்டம் இயற்றி குடியரசு தலைவரின் ஒப்புதலை பெறலாம் எனவும் ஏ,கே ராஜன் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.




