இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதை கேள்விக்குறியாக்கியுள்ளது.
7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் 2-ல் இடம் பெற்றுள்ள முன்னாள் சாம்பியனான இந்திய அணி, தனது 2-வது லீக்கில் நியூசிலாந்துடன் பலப்பரிட்சை நடத்தியது. ஏற்கனவே பாகிஸ்தான் அணியுடன் நடைபெற்ற போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்து இருந்ததால் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருந்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். நியூசிலாந்து அணியில் டிம் செய்பெர்ட்டுக்குப் பதில் ஆடம் மில்னே தேர்வு செய்யப்பட்டிருந்தார். இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. சூர்யகுமார் யாதவுக்குப் பதில் இஷான் கிஷன், புவனேஷ்வர் குமாருக்குப் பதில் ஷர்துல் தாக்குர் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர். இதன்படி இந்திய அணியின் துவக்க வீரர்களாக இஷான் கிஷன் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் களமிறக்கினர்.
இந்த ஜோடியில் 4 (8) ரன்களில் இஷான் கிஷன் ஆட்டமிழந்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தார். இதனையடுத்து சீரான இடைவெளியில் ரன் சேர்த்து கொண்டிருந்த கே.எல்.ராகுல் 18 (16) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். இந்திய வீரர்கள், நியூசிலாந்து பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். அடுத்ததாக ரோகித் சர்மா 13 ரன்களிலும், கேப்டன் விராட் கோலி 9 (17) ரன்னிலும், ரிஷப் பண்ட் 12 (19) ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பியது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. சிறிது நேரம் நிலைத்து நின்ற ஹர்திக் பாண்ட்யாவும் 23 (24 ) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். முடிவில் ஜடேஜா 26 (19) ரன்களும், சமி ரன் ஏதும் எடுக்காமலும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இறுதியில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து அணியின் சார்பில் டிரென்ட் பவுல்ட் 3 விக்கெட்டுகளும், இஷ் சோதி 2 விக்கெட்டுகளும், டிம் சவுதி மற்றும் ஆடம் மில்னே ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளும் எடுத்தனர். நியூசிலாந்து அணியின் சிறப்பான பந்து வீச்சால் 9 ஒவர்கள் (54 பந்துகள்) டாட் பாலாக அமைத்தது இந்திய ரசிகர்களை கவலை அடைய செய்தது. இதையடுத்து 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி எளிதில் இலக்கை எட்டியது. துவக்க வீரர் மார்ட்டின் குப்தில் 20 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், டேரில் மிட்செல்-கேப்டன் கேன் வில்லியம்சன் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
அதிரடியாக ஆடிய மிட்செல் 49 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா ஓவரில் ஆட்டமிழந்தார். வில்லியம்சன் 31 பந்துகளில் 33 ரன்கள் (நாட் அவுட்), கான்வே 2 ரன்கள் (நாட் அவுட்) சேர்க்க, நியூசிலாந்து அணி 33 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இதனால் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்திய அணி இரண்டாவது தோல்வியை சந்தித்துள்ளது. இந்த வெற்றியின்மூலம் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.
அதே சமயத்தில் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது கேள்விக்குறியாகியுள்ளது.